search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் புத்தக திருவிழா
    X

    2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் புத்தக திருவிழா

    • 2 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் புத்தக திருவிழா நடைபெற உள்ளது
    • வரும் 19-ந் தேதி தொடங்குகிறது

    கரூர்:

    கரூரில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை முன்னிட்டு கலெக்டர், த.பிரபுசங்கர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேசுகையில்,

    கரூர் மாவட்ட வரலாற்றில் முதல்முறையாக அரசு நிதிகளைக் கொண்டு மிகப்பெரிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க புத்தகத் திருவிழா வரும் 19 -ந் தேதி தொடங்கி 29 -ந் தேதி வரை 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கரூர் திருமாநிலையூர் பகுதியில் கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு 100 அரங்குகள் மற்றும் கூட்டரங்குகள் அமைக்கப்படும். கூட்டரங்கில் 1,000 பேர் பங்கு பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைப்பதற்கு ஆட்சியர் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளன.

    காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடக்க கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகள். மாலை 6 மணி முதல் 8 மணி வரை சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் உள்ளிட்ட பலர் பங்கு பெறக்கூடிய நிகழ்வுகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    புத்தகத் திருவிழாவில் 11 நாட்களில் 2 லட்சம் பேர் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான ஏற்பாடுகள், பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளன.

    புத்தக திருவிழா சிறப்பாக அமைய கரூர் மாவட்ட பொதுமக்கள், பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புத்தக பிரியர்கள் சிறந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி , மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம்.லியாகத், கவிதா (நிலமெடுப்பு) கோட்டாட்சியர்கள் (கரூர்) ரூபினா, (குளித்தலை) புஷ்பாதேவி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், வாசகர் வட்ட நிர்வாகி சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×