search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூற்றாண்டு கண்ட பழமையான கொட்டாரம் அச்சன்குளம் பாலம் இடிந்து விழும் அபாயம்
    X

    நூற்றாண்டு கண்ட பழமையான கொட்டாரம் அச்சன்குளம் பாலம் இடிந்து விழும் அபாயம்

    • ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்தப் பாலம் வழியாக செல்லும்போது இந்த பாலம் குலுங்குகிறது
    • கொட்டாரம் அச்சன்குளம் பாலத்தை இடித்து அகற்றி விட்டு அதற்கு பதிலாக விரிவான புதிய பாலம் கட்ட வேண்டும்

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் முதல்நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அச்சன்குளம்.நாகர்கோவில்- கன் னியாகுமரி தேசிய நெடுஞ் சாலையில் கொட்டாரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது இந்த அச்சன்குளம் கிராமம். இங்கு 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

    இந்த கிராமத்துக்கு புத்தனாறு கால்வாயை கடந்துதான் செல்ல வேண்டும். இந்தக் கால்வாயை கடந்து செல்வதற்கு வசதியாக கால்வாயின் குறுக்கே குறுகலான பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாலம் கட்டி நூற்றாண்டுகளை கடந்து விட்டது. இந்த பழமையான பாலம் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இந்த பாலத்தில் அடிப் பகுதி உடைந்து காணப்படுகிறது. இந்த பாலத்தை கடந்து அச்சன்குளம், செல்வன் புதூர், மருந்துவாழ்மலையின் அடிவார பகுதி போன்ற இடங்களுக்கு மக்கள் சென்று வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த பாலத்தின் வழியாகத்தான் செல்வன்புதூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளும், மருந்துவாழ் மலை அடிவாரப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளும் மனநல காப்பகத்துக்கு செல்பவர்களும் மருந்து வாழ்மலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் தினசரி சென்று வருகிறார்கள்.

    அதுமட்டுமின்றி இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாய விளை நிலங்கள் அமைந்து உள்ளன. இதனால் இந்த பாலம் வழியாக விவ சாய வேலைகளுக்காக அன்றாடம் விவசாயிகள் சென்று வருகிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்து வம் வாய்ந்த இந்த பாலம் மிக குறுகலான பாலமாக இருப்பதால் பஸ், கார், வேன், டெம்போ, டிரக்கர், லாரி போன்ற கனரக வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாக செல்ல முடிவதில்லை. மேலும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் இந்தப் பாலம் வழியாக செல்லும்போது இந்த பாலம் குலுங்குகிறது. தற்போது இந்த பாலம் ஆயுட்காலம் முடிந்து விட்டதால் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    எனவே நூற்றாண்டு கண்ட இந்த பழமையான கொட்டாரம் அச்சன்குளம் பாலத்தை இடித்து அகற்றி விட்டு அதற்கு பதிலாக விரிவான புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது சம்பந்தமாக கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து இந்த பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    Next Story
    ×