என் மலர்tooltip icon

    ஈரோடு

    20-வது நாளாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    சத்தியமங்கலம்:

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம்- கர்நாடக மாநிலம் இடையே தற்போது கொஞ்சம் பதட்டம் குறைந்து உள்ளது. எனினும் காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளும் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருப்பதால் தொடர்ந்து பரபரப்பான நிலை நிலவி வருகிறது.

    இதையொட்டி இரு மாநிலங்களுக்கும் இடையே தொடர்ந்து பஸ்கள் இன்னும் இயக்கப்படவில்லை.

    இன்று 20-வது நாளாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    சத்தியமங்கலம் பண்ணாரி, அரசனூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பஸ்களும் இதேபோல் கர்நாடகத்திலிருந்து வரும் பஸ்களும் இருமாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று திரும்புகிறது.

    புளிஞ்சூரில் இறங்கும் இருமாநில மக்களும் பிறகு அங்கிருந்து தங்கள் மாநிலத்துக்கு பஸ்கள் ஏறி செல்கிறார்கள்.

    அதேசமயம் கர்நாடகவிலிருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடிக்கு கர்நாடக மாநில தனியார் பஸ்கள் மட்டும் தொடர்ந்து வந்து செல்கிறது. தாளவாடியில் இருமாநில மக்களும் சம அளவில் வசிப்பதால் அங்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

    மேலும் பாதுகாப்பு கருதி தமிழக லாரிகளும் சத்தியமங்கலம் வழியாக தொடர்ந்து செல்லவில்லை. சில கர்நாடக மாநில லாரிகள் தமிழக பதிவெண் ஒட்டிய ஸ்டிக்கர்களுடன் வந்து செல்வதை பார்க்க முடிகிறது.

    இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் இரு மாநில போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கர்நாடக மாநிலத்துக்கு லாரிகள் செல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கிறது.

    சத்தியமங்கலம் வனத்தில் இரவில் தீ விபத்தில் காட்டுவிலங்குகளின் குட்டிகள், ஊர்வன, பறப்பன ஆகிய உயிரினங்களும் கருகி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் காப்புக்காடு கம்பத்ராயன் கிரி வனத்தில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து.

    அப்போது வேகமாக வீசிய காற்றில் தீ மளமளவென எரிந்து மேலும் பரவியது. இதில் 300 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த மூலிகை செடிகள் மற்றும் பல ஆண்டுகளாக உள்ள மரங்கள் தீயில் எரிந்து நாசமடைந்தன. கொளுந்து விட்டு எரிந்த தீ 7 கி மீ தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் வரை தெரிந்தது.

    இந்த தீ விபத்தால் வனத்தில் இருந்த பறவைகள், விலங்குகள் பவளக் குட்டை வனத்திற்கு இடம் பெயர்ந்தன. தீ விபத்தில் காட்டுவிலங்குகளின் குட்டிகள், ஊர்வன, பறப்பன ஆகிய உயிரினங்களும் கருகி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இரவுநேரம் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியமால் வனத்துறையினர் திணறினர். நடப்பாண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் சத்தியமங்கலம் வனப் பகுதியில் வறட்சி ஏற்பட்டது. போதிய மழை இல்லாத காரணத்தால் வனத்தில் உள்ள செடி,கொடிகள் காய்ந்து சருகாகின. பசுமையான மூங்கில் மரங்களும் காய்ந்து விட்டன.

    இதனால் வனத்தில் பிடித்த தீ எளிதாக பிற இடங்களுக்கும் பரவியதால் இந்த அளவில் பெரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலையில் சத்தியமங்கலம் மற்றும் கடம்பூர் வன ஊழியர்கள் தீ பிடித்து எரியும் வனப்பகுதிக்கு விரைந்தனர். தீயை முழுமையாக கட்டுப்படுத்த போராடி வருகிறார்கள்.

    ஈரோடு கனி ராவுத்தர் குளம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 21 வீடுகள் இடித்து தரைமாக்கப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு கனி ராவுத்தர் குளத்தில் கரையோரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும் எனவே இந்த வீடுகளை அகற்ற வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது,

    இதையொட்டி அந்த வீடுகளில் உள்ளவர்களை காலி செய்யும்படி ஈரோடு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று மதியம் பொக்லைன் எந்திரம் மூலம் கனி ராவுத்தர் குளம் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 21 வீடுகள் இடித்து தரைமாக்கப்பட்டன.

    இதையொட்டி அங்கு போலீஸ், பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    பல வருடங்களாக அங்கு வசித்து வந்தவர்கள் தங்களது வீடுகள் இடிக்கப்படுவதை சோகமாக பார்த்தனர்.

    கோபி அருகே மொபட் மீது கார் மோதி விபத்தில் அதில் பயணம் செய்த முதியவர் பலியானார்
    கோபி:

    கோபியை அடுத்த வெட்டையம் பாளையம் பாறைக்காட்டு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70) இவரது மகன் வேலுச்சாமி என்ற வெற்றிவேல் (38).

    வேலுச்சாமிக்கு நேரம் சரியில்லை என்று கூறி அவரது ஜாகத்தை பார்க்க ராமசாமி மொபட்டில் சென்றார். அவரது மகன் வேலுச்சாமி , இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரும் இன்னொரு மொபட்டில் சென்றனர்.

    அவர்கள் கோபி அருகே காசிபாளையத்தில் உள்ள ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அவர்கள் டீ சாப்பிட செல்வதற்காக காசிபாளையம் அருகே வந்த போது அந்த வழியாக சென்ற ஒரு கார் ராமசாமி சென்ற மொபட் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். பின்னால் இன்னொரு மொபட்டில் வந்த மகன் வேலுச்சாமி இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே ராமசாமியை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சூரம்பட்டி நால்ரோடு அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆட்டோ ஸ்டேண்டு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மயங்கிய நிலையில் கிடந்தார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சு மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    டாக்டர்கள் அவரது உடலை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுபற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் அரசு ஆஸ்பத்திரி வளாகம் முன் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை 108 ஆம்பு லன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இவரும் யார்-எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது பற்றியும் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே கரும்பு காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஓரு ஏக்கர் கரும்புகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

    பெருந்துறை:

    காஞ்சிக்கோவில் அருகே உள்ள பாலப்பாளையம் பட்டான் காட்டு தோட்டம் என்ற இடத்தை சேர்ந்தவர் நல்லசாமி .இவரது மனைவி மணியாத்தாள் (வயது 55).

    இவர்களுக்கு சொந்தமாக 3 ஏக்கர் கரும்புகாடு உள்ளது. இதில் 5 அடி உயரத்தில் கரும்பு செடிகள் வளர்ந்து இருந்தன.

    நேற்று அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக கரும்பு காட்டுக்கு மேல் உள்ள மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டன. இதனால் ஏற்பட்ட தீப்பொறி கரும்பு காட்டில் விழுந்தது. இதன் காரணமாக கரும்புகாட்டில் தீ விபத்து ஏற்பட்டு மள மள என்று பிடித்து எரிந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு படை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    இதில் ஓரு ஏக்கர் கரும்புகள் தீயில் எரிந்து சாம்பலாயின.

    அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் 30பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஈரோடு:

    கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 36), கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளரான இவரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் கடைஅடைப்பு, இறுதி ஊர்வலத்தில் வன்முறை, மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

    திருப்பூர் மாவட்டத்தில் கடைஅடைப்பு போராட்டம் நடந்தது. மற்றும் 15 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இதுபோல ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, புளியம்பட்டியிலும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. 3 பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. புளியம்பட்டியில் நேற்று பஸ்கள் மற்றும் எந்த வாகனங்களும் ஓடவில்லை.

    ஈரோட்டில் நேற்று இந்து முன்னணி சார்பில் 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவங்களையொட்டி ஈரோடு மாவட்டத்தில் அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 30பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கைது நடவடிக்கை மேலும் தொடரும் என்று போலீசார் கூறி உள்ளனர்.
    இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து ஈரோட்டில் 4 இடங்களில் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    கோவை அருகே இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்யக்கோரியும் இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஈரோடு நகரில் இந்த படுகொலையை கண்டித்து 4 இடங்களில் சாலை மறியல் நடந்தது.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே இந்து முன்னணி மாநகர செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலும், சத்தி ரோட்டில் பா.ஜனதா மாவட்ட பொது செயலாளர் கலைசெல்வன் தலைமையிலும் மறியல் நடந்தது.

    இதே போல் பிரப் ரோட்டில் இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சிவா தலைமையிலும், பெருந்துறை ரோட்டில் இந்து முன்னணி பிரமுகர் சங்கர் தலைமையிலும் சாலை மறியல் நடந்தது.

    இதில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் பூசப்பன், பாஜனதா பிரச்சார அணி பொறுப்பாளர் சரவணன், வக்கீல் அணி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாலை மறியல் நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி கொண்டு சென்றனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பு.புளியம்பட்டி:

    கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் நள்ளிரவில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையால் கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. பஸ்களும் பல ஓடவில்லை. மேலும் ஓடிய பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்து முன்னணி பிரமுகர் கொலையையொட்டி ஈரோடு மாவட்டத்திலும் பதட்டமும்-பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கோவை-ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள பு.புளியம்பட்டி, சத்திய மங்கலத்தில் பதட்ட நிலை நிலவி வருகிறது.

    சத்தியமங்கலத்திலிருந்து பு.புளியம்பட்டி வழியாக கோவைக்கு 10 நிமிடத்துக்கு ஒரு பஸ் செல்லும். ஆனால் இன்று காலை அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெரும்பாலும் ஓடவில்லை.

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பஸ்கள் அதிகமாக ஓடாததால் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்து வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டியிலிருந்து நிறைய பேர் கோவையில் பல்வேறு பணியில் உள்ளனர். அலுவலகங்களில் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் இன்று கோவை செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    இதனால் பு.புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் பஸ் நிலையங்களில் கோவை செல்லும் பயணிகள் தவித்தப்படி உள்ளனர். சத்தியமங்கலத்திலிருந்து கோவை சென்ற ஒரு தனியார் பஸ் மீது திடீரென கல் வீசப்பட்டது. இதனால் சத்தியமங்கலத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
    பதவி பறிக்கப்பட்டதால் அ.தி.மு.க. பிரமுகரின் தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு காரை வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராக 2 ஆண்டு இருந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இதில் முரளிதரன் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

    இதையொட்டி நீக்கப்பட்ட முரளிதரன் இன்று ஈரோடு எம்.ஜி.ஆர்.சிலை அருகே தீக்குளிக்கப் போவதாக அறிவித்திருந்தார். இவரது இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் முன் எச்சரிக்கையாக எம்.ஜி.ஆர். சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் முரளிதரன் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலிருந்து மண்எண்ணெய் கேனுடன் தீக்குளிக்க எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அவரை அ.தி.மு.க. பிரமுகர்கள் சமரசம் செய்தனர். அவசரப்பட வேண்டாம் என்று கூறினர். ஆனால் அதையெல்லாம் கேட்டகாமல் அவர் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்த முரளிதரனை போலீசார் தடுத்து, அவரிடமிருந்து மண்ணெண்ணை கேனை பறித்தனர். பிறகு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    சிறிது நேரம் அங்கு வைத்திருந்த அவரிடம் போலீசார் அறிவுரை கூறி பிறகு விடுவித்தனர். அ.தி.மு.க. பிரமுகரின் தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆ.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள ஆணைக்கல் பாளையம் வாய்க்கால் மேட்டை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி காவியா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. ஒரு மகன் உள்ளான்.

    காவியாவுக்கு அடிக்கடி உடல் நலம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் வைத்தியம் பார்த்து வந்தார். இருப்பினும் நோய் குணமாகவில்லை.

    இதனால் மனம் உடைந்த நிலையில் அவர் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் காவியா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்.டி.ஓ விசாரணையும் நடக்கிறது.

    மொடக்குறிச்சி பகுதியில் போலி தமிழக பதிவெண்களுடன் கர்நாடக மாநில லாரிகள் சரக்குகள் ஏற்றிக்கொண்டு செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    மொடக்குறிச்சி:

    காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள பிரச்னையினால் கர்நாடக மாநில லாரிகள் தாக்கப்படும் என்ற பயத்தில் கடந்த சில நாளாக லாரிகள் தமிழக எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    கர்நாடக லாரிகள் தமிழர்களால் தாக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, லாரிகளில் உள்ள எண்கள் போலியாக தமிழக வட்டார போக்குவரத்து அலுவலக எண்கள் அச்சடித்து நெம்பர் பிளேட்களின் மீது தற்காலிகமாக ஒட்டி தாராளமாக வலம் வருகின்றன.

    நேற்று மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு அரிசி பாரம் ஏற்றிய கர்நாடக லாரியில் போலி நெம்பர் பிளேட் ஒட்டி லாரி வந்தது.

    பூந்துறைசேமூர் பகுதியில் லாரி வந்தபோது, லாரி ஓட்டுனர் வழிதெரியாமல் அரிசி ஆலைக்கு வழி கேட்டபோது, அங்கிருந்தவர்கள் லாரியின் லாரி ஓட்டுனரின் பேச்சை வைத்து, கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டனர்.

    பின்னர் விசாரித்ததில் ஓட்டுனர் உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் அங்கிருந்தவர்கள் இதுபோல் செய்யவேண்டாம் கர்நாடகாகாரர்களை போல் நாங்கள் உங்களை தாக்க மாட்டோம். கொஞ்ச நாட்களுக்கு தமிழகத்திற்குள் வரும்போது பாதுகாப்புடன் வருமாறும் போலி எண் கொண்ட நெம்பர் பிளேட் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்து அனுப்பினர்.

    இதனால் அப்பகுதியில் 30 நிமிட நேரம் பரபரப்பு நிலவியது.
    ×