search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை மண்டல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?-மாநகராட்சி கமிஷனர் விளக்கம்
    X

    மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி

    பாளை மண்டல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?-மாநகராட்சி கமிஷனர் விளக்கம்

    • நெல்லை மாநகர பகுதியில் நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளது. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
    • வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு மாநகர பகுதியில் ஓடினாலும் மாநகரப் பகுதி முழுவதுமாகவே தொடர்ந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் என்ற 4 மண்டலங்கள் உள்ளது. இந்த 4 மண்டலங்களிலும் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.

    குடிநீர் தட்டுப்பாடு

    இங்கு சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு மாநகர பகுதியில் ஓடினாலும் மாநகரப் பகுதி முழுவதுமாகவே தொடர்ந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் வினியோகம் சற்று மந்தமாகவே உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    லாரிகள் மூலம் வினியோகம்

    ஆனாலும் பொதுமக்களின் தேவையை உணர்ந்து மாநகராட்சி சார்பில் சில நேரங்களில் லாரிகள் மூலமாக தெருத்தெருவாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பாளை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக 35, 36,6,8, 32 உள்ளிட்ட வார்டுகளில் 15 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். இதற்காக மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனரிடம் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளித்து வந்த நிலையிலும் இன்னும் குடிநீர் வினியோகம் சீராகவில்லை.

    முற்றுகை

    இந்நிலையில் முறையாக குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தி நேற்று இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள நீரேற்று நிலையத்தை வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் அங்கு உடனடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.இன்னும் ஒரு சில நாட்களில் குடிநீர் வினியோகம் முழுமையாக சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-

    மாநகரப் பகுதியில் குறிப்பாக பாளை மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் கடந்த ஒரு வாரமாக குடிதண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து பிரச்சினைகளும் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் சீராகும். பாளை மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் மணப்படை வீட்டில் உள்ள உறை கிணற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைதான். இந்த மணப்படை வீடு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் பாளை மண்டல பகுதி மக்களுக்கு அதிக அளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

    இங்கு போடப்பட்டுள்ள பம்புகள் சுமார் 40 வருடங்கள் பழமையானவை, தற்போது மோட்டார் மற்றும் குழாய்கள் புதிதாக போடப்பட்டிருந்தாலும் உறை கிணறுக்குள் கிடக்கும் தண்ணீரில் உள்ள பம்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

    இது போன்ற பிரச்சினை தற்போது தான் முதல் முறையாக ஏற்பட்டுள்ளது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறோம். பழுதடைந்த கருவிகளை வண்ணார்பேட்டையில் ஒரு பட்டையில் சரி செய்ய முயற்சி செய்து வருகிறோம். இதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்த யோசனைகளை கோவை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேட்டுள்ளோம்.அதன்படி பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    20 பேர் கொண்ட குழு

    இதற்கிடையே பொதுமக்களின் தேவையை உணர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகளை கொண்டு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 6 மணி முதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து 9 லாரிகள் மூலம் பாளை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    மணப்படை வீடு பகுதியில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் என சுமார் 20 பேர் கொண்ட குழு கடந்த 2 நாட்களாக பகல் இரவு வராமல் குடிநீர் விநியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுவரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×