search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

    12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

    • மாணவர்கள் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.
    • கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்டங்களில் 29, 30, அடுத்த மாதம் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

    12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த திட்டத்தின் நோக்கம் மேல்நிலைப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் தங்களின் எதிர்கால கனவை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.

    இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குனரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    எச்.சி.எல். நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

    எச்.சி.எல். நிறுவனம் 2 ஆயிரத்து 500 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகளை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்கவும், அப்பயிற்சிக்கான முழு செலவினையும் அரசே ஏற்கும் எனவும், அம்மாணவர்கள் பட்ட மேற்படிப்பை பயில வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் உறுதி செய்யப்படவுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 29, 30, அடுத்த மாதம் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

    Next Story
    ×