search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்த வழக்கு - தீர்ப்பை தள்ளிவைத்தது ஐகோர்ட்டு
    X

    அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

    அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைத்த வழக்கு - தீர்ப்பை தள்ளிவைத்தது ஐகோர்ட்டு

    • சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம்.
    • பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பை முக்கியமாக கருதுகிறோம்.

    சென்னை:

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அருகே கடந்த 11-ம் தேதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களுடன் காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியதாவது:

    அ.தி.மு.க. தலைமை அலுவலத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் பொது அமைதி, பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை முக்கியமாக கருதுவதாக கூறப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது, வன்முறை சம்பவத்திற்கு பின் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. தலைமை அலுவலகம் இரு தரப்பில் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை. சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ, சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன.

    தற்போது இரு தரப்பினர் இடையே எந்த சமாதானமும் ஏற்படவில்லை. மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை. சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சினை ஏற்படலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ராயப்பேட்டை பகுதி வன்முறை தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் கைது செய்ய நடவடிக்க எடுக்கப்படுகிறது என நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர். மேலும் 15 பேர் கைது தொடர்பான ரிமாண்ட் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், இருதரப்பு வாதங்களும் நடைபெற்றன.

    இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுவை திங்கட்கிழமை தாக்கல் செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×