search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு
    X

    அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு

    • மண்டபத்திற்கு வெளியே தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு அதில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போடுவதற்காக மேஜைகள் போடப்பட்டு இருந்தன.
    • இதே போல புதுவை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கையெழுத்து போடவும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற சர்ச்சை வெடித்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவியது.

    கடந்த வாரம் இந்த மோதல் உச்ச கட்டத்தை அடைந்தது. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக தெரிவித்தார்.

    ஆனால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. ஐகோர்ட்டில் பொதுக்குழு கூட்டுவதற்கு தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல் முறையீடு செய்யப்பட்டது. நேற்று விடிய விடிய நடந்த இந்த வழக்கில் பொதுக்குழுவில் ஏற்கனவே உள்ள 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்றும், புதிதாக தீர்மானங்கள் கொண்டு வரக்கூடாது என்றும் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு கூறினார்கள்.

    இன்றைய பொதுக்குழுவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்தது.

    இதற்கு அ.தி.மு.க.வில் ஆதரவும் பெருகியது. 65-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பது தெரியவந்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை கூடியது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னைக்கு வரத் தொடங்கினார்கள்.

    இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்கத்திற்கு வரத்தொடங்கினார்கள்.

    மண்டபத்தின் வெளிப்புற வாயிலில் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கடும் சோதனைகளுக்கு பிறகு அடையாள அட்டை இருந்தவர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    காலை 7 மணி அளவிலேயே பெரும்பாலான உறுப்பினர்கள் மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அனைவரும் அமர வைக்கப்பட்டனர்.

    மண்டபத்திற்கு வெளியே தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு அதில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து போடுவதற்காக மேஜைகள் போடப்பட்டு இருந்தன.

    இதே போல புதுவை, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கையெழுத்து போடவும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

    அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்ட பின் மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 9 மணிக்கு பிறகு முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக மண்டபத்திற்கு வரத் தொடங்கினார்கள்.

    இதில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என முதலில் தகவல் வெளியானது.

    ஆனால் பொதுக்குழு தொடர்பான தீர்ப்பில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் அவர் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தார்.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தனது பிரசார வாகனத்தில் ஆதரவாளர்களுடன் புறப்பட்டார்.

    கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை கட்சி கொடிகளுடன் திரண்டிருந்த தொண்டர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஓ.பன்னீர் செல்வம் வரும் போது அவருக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி வரும் போது அவருக்கு ஆதரவாகவும் வாழ்க கோஷம் எழுப்பினார்கள்.

    இதற்காக பல இடங்களில் சிறிய மேடை அமைத்து இசை நிகழ்ச்சிகள் மற்றும் குதிரைகளில் வீரர்கள் நின்று வரவேற்பு, கரகாட்டம், செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    கூட்டம் நடந்த மண்டபத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு கடுமையான கூட்டம் அலை மோதியது.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வந்த வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. இதனால் அவர்கள் 2 பேரும் பொதுக்குழு கூட்டத்திற்கு தாமதமாக வந்து சேர்ந்தனர்.

    மண்டபத்திற்கு முதலில் ஓ.பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார். அப்போது அவரது வாகனத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு துரோகி ஓ.பி.எஸ். என கோஷம் எழுப்பினார்கள்.

    பின்னர் காரை விட்டு இறங்கிய ஓ.பன்னீர் செல்வம் கூட்டம் நடந்த மண்டபத்திற்குள் நுழைந்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த தொண்டர்கள் ஒற்றை தலைமை வேண்டும் ... ஒற்றை தலைமை வேண்டும்... துரோகி ஓ.பி.எஸ். என தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

    மேலும் ஓ.பன்னீர் செல்வத்தை வெளியே செல்லும் படி பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கூச்சல் போட்டனர். எடப்பாடி அணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஓ.பன்னீர் செல்வம் அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி அங்கிருந்து எழுந்து சென்று தொண்டர்களை அமைதிபடுத்தினார். தொண்டர்கள் மத்தியில் அவர் 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை' என்ற எம்.ஜி.ஆரின் பாடலை சொல்லியபடியே சமாதானப்படுத்தினார்.

    இதனால் மண்டபத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவரை பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி வாழ்க, கட்சியின் பொதுச்செயலாளரே வருக என வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள்.

    எடப்பாடி பழனிசாமி படங்களுடன் கூடிய போர்டுகளை கையில் ஏந்தி மேளதாளத்துடன் உற்சாகத்துடன் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    தொண்டர்கள் வரவேற்பை பெற்று கொண்ட எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். 2 தலைவர்களும் தாமதமாக வந்ததால் 10 மணிக்கு கூட வேண்டிய பொதுக்குழு கூட்டம் தாமதமாக 11.30 மணிக்கு மேல் தொடங்கியது.

    தற்காலிக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    இந்த கூட்டத்தில்2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் 2 தலைவர்களும் கலந்து கொண்ட சூழ்நிலையில் ஒற்றை தலைமை கோஷம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுக்குழு கூட்டத்தையொட்டி மண்டபத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    Next Story
    ×