search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை

    சென்னிமலை, நம்பியூர், அம்மாபேட்டை, கோபி, பவானிசாகர், மொடக்குறிச்சி பகுதிகளில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மே மாதம் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதியடைந்தனர். மே மாதம் 2-வது வாரத்தில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்தது.

    குறிப்பாக அந்தியூர் அம்மாபேட்டை, தாளவாடி, பவானிசாகர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி போன்ற பகுதிகளில் கன மழை பெய்ததால் இந்தப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் முடியும் தருவாய் என்பதால் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. ஆனால் மாலை 5 மணிக்கு பிறகு கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.

    சென்னிமலை, நம்பியூர், அம்மாபேட்டை, கோபி, பவானிசாகர், மொடக்குறிச்சி பகுதிகளில் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    மாலையில் திடீரென மழை பெய்ததால் இதை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று மாலை 5.15 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திடீர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டின் பின்பகுதியில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சென்னிமலை-55, எலந்தகுட்டை52.8, நம்பியூர்-50, அம்மாபேட்டை-35, கோபி-22, பவானிசாகர்-19, மொடக்குறிச்சி-9, ஈரோடு-7, தாளவாடி-4.5, கவுந்தப்பாடி-4.2, வரட்டுப்பள்ளம்-3, குண்டேரிபள்ளம்-2.

    Next Story
    ×