search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி அருகே செந்தில்குமார் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்
    X
    வாணியம்பாடி அருகே செந்தில்குமார் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்

    வாணியம்பாடி அருகே எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளை அகற்ற எதிர்ப்பு

    வாணியம்பாடி அருகே எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கூட்டுரோடு பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகள், கடைகள் கட்டி ஆக்கிரமித்து வைத்திருந்தனர். 

    ஆக்கிரமிப்பு இதனை அகற்ற நெடுஞ்சாலைதுறையினர் நடவடிக்கை மேற்கொண்ட போது ஆக்கிரமிப்பு அகற்ற கூடாது என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டது. அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் உதவியுடன் சிலரது ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவில்லை என்றும், இந்த ஆக்கிரமிப்புகளினால் தும்பேரி கூட்டுரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறி மற்றொரு தரப்பினர் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி 2 நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து நேற்று காலை நெடுஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் லோகநாதன், உதவி கோட்ட பொறியாளர் அன்புஎழில் தலைமையில் நெடுஞ்சாலைதுறையினர் தாசில்தார் சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ஜெயலட்சுமி, அருண்குமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் கூட்டுரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் என 37 கட்டங்கள் இடித்து அகற்றினர். 

    போராட்டம் இந்நிலையில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் 30 ஆண்டுக்கு முன்பு அதிமுக சார்பில் நிறுவப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அதே பகுதியில் இருந்த ஜெயலலிதாவின் முழு உருவ சிலைகளை அகற்ற நெடுஞ்சாலைதுறையினர் ஜேசிபி இயந்திரகளை கொண்டுவந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து செந்தில்குமார்  எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார், ஒன்றிய செயலாளர்கள் சாம்ராஜ், சீனிவாசன், நகர செயலாளர் சதாசிவம், துணை செயலாளர் கோவிந்தன், பொருளாளர் தன்ராஜ், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிலைகளை அகற்றகூடாது என்றும், வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பராபட்சம் காட்டுவதாகவும், முன்னாள் முதல்வர்களின் உருவசிலைகளை அகற்ற கூடாது என்றனர். 

    போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், தாசில்தார் சம்பத் மற்றும் நெடுஞ்சாலைதுறை, வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கலெக்டரிடம் இதுகுறித்து கூறி உரிய முடிவு எடுப்பதாக கூறியதையடுத்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×