search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
    X
    பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    தமிழகத்தில் ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

    எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார்.

    ஐதராபாத் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தனி விமானத்தில் சென்னை வந்து சேர்ந்த அவருக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய மந்திரி எல்.முருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே ஏராளமான பாஜகவினர் திரண்டு பிரதமரை வரவேற்றனர்.

    இந்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு வந்தார் பிரதமர் மோடி. பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு ஸ்டேடியத்திற்கு வந்தார்.

    நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பிரதமர், பல்வேறு கட்டமைப்பு செயல் திட்டங்களை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 30 கி.மீ. தூரத்துக்கு ரூ.598 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 3-வது ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதேபோல் மதுரை-தேனி இடையே ரூ.506 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அகல ரெயில் பாதையையும் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவில் 115 கி.மீ. தூரத்துக்கு குழாய் வழியே எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 115 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.849 கோடி செலவில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெங்களூரு-திருவள்ளூர் பிரிவில் 271 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிவாயு குழாய்கள் ரூ.911 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் திட்டத்தையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

    கலங்கரை விளக்கம் செயல் திட்டத்தின் கீழ் ரூ.116 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஒப்படைத்தார்.

    இதுதவிர, ரூ. 5,852 கோடி செலவில் துறைமுகம்-மதுரவாயல் இடையே அமைக்கப்படும் இரண்டடுக்கு மேம்பாலம், ரூ.14.872 கோடி செலவில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைவு வழி சாலை ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நெரலூருவில் இருந்து தர்மபுரி இடையே ரூ.3,871 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைத்தல்,  சென்னையில் ரூ.1,428 கோடியில் பல வகை வழிமுறைகளுடன் கூடிய சரக்கு பூங்கா அமைத்தல் ஆகிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    சென்னை எழும்பூர், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய 5 ரெயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

    மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.724 கோடி செலவில் தனி பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    நிறைவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் என மொத்தம் ரூ. 31 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான 11 கட்டமைப்பு செயல்  திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

    விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், பெட்ரோலிய துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×