search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    உசிலம்பட்டி அருகே 2 கார்களில் கடத்திய 750 கிலோ புகையிலை-குட்கா மூட்டைகள் பறிமுதல்: 5 வாலிபர்கள் கைது

    உசிலம்பட்டி அருகே 2 கார்களில் கடத்திய 750 கிலோ புகையிலை-குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி மாநிலம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் உத்தரவின் பேரில் மதுரை சரக துணைத்தலைவர் பொன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு மதுரை-தேனி சாலையில் உள்ள முத்துப்பாண்டி பட்டி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து 2 கார்களையும் போலீசார் சோதனையிட்ட போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா ஆகியவை 67 மூட்டைகளில் 750 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து கார்கள், மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கொங்கபட்டியைச் சேர்ந்த ஜெயவீரன் மகன் பிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா ராமச்சந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் மகன் மூர்த்தி, தர்மபுரி மாவட்டம் பிடமனேரி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்ராஜ் மகன் அம்பிரிஷ், சுந்தரேஷ் மகன் திரிசங்கு என்ற சங்கர் என தெரியவந்தது.

    5 பேரையும் கைது செய்த போலீசார் குட்கா-புகையிலை எங்கிருந்து கடத்தி வந்தது? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×