search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் சாலையில் தடுப்பு இல்லாமல் குழாய் பதிக்கும் பணி நடைபெறும் காட்சி.
    X
    ஆலங்குளம் சாலையில் தடுப்பு இல்லாமல் குழாய் பதிக்கும் பணி நடைபெறும் காட்சி.

    ஆலங்குளம் பகுதியில் அணுகு சாலை அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆலங்குளம் பகுதியில் அணுகு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஆலங்குளம்:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி கடந்த 10 மாதங்களாக நடைபெற்று வருகிறது.சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள், பாவூர்சத்திரம் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் உள்ளிட்டவை இந்த பகுதியில் அமைக்கப்படுகிறது. இதில் சில பாலங்கள் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படாமல் ராட்சத குழாய்களை கொண்டு அமைக்கப்படுகிறது.

    சாலையின் ஒரு பகுதியில் இருந்து மறுபகுதிக்கு மழைநீர் செல்ல குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.  ஆனால் ஆலங்குளம் மலைக்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் இருபுறமும் பாதி அளவு மண் நிரம்பி உள்ளது.

     மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் மறு நடவு செய்யப்பட்ட நிலையில் அவைகளில் பெரும்பாலானவை பராமரிப்பின்றி பட்டு போகும் நிலையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 1.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும்  அவை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    தற்போது அமைக்கப்பட்டு வரும் சாலையில் இருபுறமும் அணுகுசாலை இல்லாமல் இருப்பதால் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறினால் நேரடியாக சாலையிலேயே கால் வைக்கும் நிலை உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஏனெனில் இந்த சாலை வழியே பயணிக்கும் வாகனங்கள் அதிவேகமாக செல்லக்கூடும். நகர் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்து வெளியேறும் மக்கள் இதை கவனிக்காமல் சாலையின் குறுக்காக சென்றால் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    இதேபோல் குழாய் பதிக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் பேரிகார்டுகள் உள்ளிட்ட எச்சரிக்கை பலகைகள் வைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     தற்போதைய திட்டப்படி சாலை அமைக்காமல் அணுகு சாலை அமைத்து நான்குவழிச் சாலை பணிகளை தொடரவேண்டும்.  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நான்குவழிச் சாலை பாலம், அணுகுசாலை, மரங்கள் மறு நடவு, பொதுமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    Next Story
    ×