search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகை

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியை தாண்டி உள்ளது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜுன் 12-ந்தேதி காவிரி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீர் இருப்பு 117அடிக்கும் அதிகமாக உள்ளதால் வழக்கத்திற்கு முன்னதாகவே டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ‘அதன்படி நாளை (24-ந்தேதி) காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை காவிரியில் பாசனத்திற்கு திறந்து வைக்கிறார். இதற்காக தனி விமானத்தில் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகிறார்.

    பின்னர் கார் மூலம் மேட்டூருக்கு செல்லும் அவருக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் இருந்த படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து தொப்பூர் வழியாக மேச்சேரிக்கு செல்லும் அவருக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மேச்சேரி பஸ் நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து மேட்டூர் செல்லும் அவர் இரவில் அங்கு ஓய்வு எடுக்கிறார்.

    நாளை காலை 10 மணிக்கு மேட்டூர் அணைக்கு சென்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில்  தண்ணீரை திறந்து வைக்கிறார். தொடர்ந்து அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை பூ தூவி வரவேற்கிறார். இதில் அரசியல் கட்சியினர், அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    பின்னர் குஞ்சாணடியூர், நங்கவள்ளி, இரும்பாலை மற்றும் சேலம் மாநகர் புறவழி சாலை, வாழப்பாடி வழியாக ஆத்தூருக்கு செல்கிறார். அங்கு மாலை 4 மணியளவில் செல்லியம்பாளையத்தில் நகர்புற அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் தமிழக அரசின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டததில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
     
    இதற்கான ஏற்பாடுகளை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம்  117 அடியை தாண்டி உள்ளது.

    மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 117.28 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 777 கன அடியாக இருந்த நிலையில் குடிநீருக்காக 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் நாளை தண்ணீரை திறந்து விடப்படும் நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தண்ணீரை திறந்து விடும் அணை பகுதி, மேடை அமைப்பையும் பார்வையிட்டார். அப்போது கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் கிறிஸ்துராஜ்  உள்பட பலர் உடன் இருந்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தமிழக சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. பிரவின்குமார்  அபினவு, எஸ்.பி. ஸ்ரீஅபினவ்  தலைமையில் 2200 போலீசாரும், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா தலைமையில் 800 போலீசாரும் என 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
    Next Story
    ×