search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்படும் கல்லணை.
    X
    வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்படும் கல்லணை.

    இலக்கை விஞ்சி குறுவை சாகுபடி?

    மேட்டூர் அணை முன்கூட்டியே நாளை திறக்கவிருக்கும் நிலையில் இலக்கை விஞ்சி குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்பு உள்ளதாக வேளாண்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளளர்.
    பூதலூர்:

    தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. நாளை காலை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தண்ணீரை திறந்துவைக்கிறார். 

    மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அடுத்த நான்கு நாட்களுக்குள் கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்லணையிலிருந்து தஞ்சை ,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா பாசனத்திற்காக அனேகமாக வரும் 28ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

    முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .நாகை, தஞ்சை, திருவாரூர்,  மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளதாக வேளாண் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை ,சம்பா, தாளடி ஆகிய பருவ நெல் சாகுபடி மொத்தமாக 16 லட்சம் ஏக்கரில் பயிரிட வாய்ப்பு உள்ளது. குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் பருவ மழை தொடங்குவதற்குள் அறுவடை செய்துவிடலாம் என்று விவசாயிகள் எண்ணிக் கொண்டுள்ளனர். 

    கூட்டுறவு சங்கங்களில் கெடுபிடி இல்லாமல் தாராளமாக குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என்பதை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். 

    இவை எல்லாவற்றையும் சமாளித்து குறுவை சாகுபடி செய்தால, அறுவடையின்போது தாராளமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அதில் விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் கொள்முதல் செய்து அடுத்த போக சாகுபடியை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது .

    மேட்டூர் அணை தண்ணீர் மே மாதத்தில் திறந்து விடப்படும்போது அதை முழுமையாக பயன் படுத்திக் கொள்ளும் வகையில் விவசாயிகளிடம் ஒரு எழுச்சியை உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் வேளாண் துறைக்கு உள்ளது . 

    வேளாண் துறை முழுமையாக செயலில் இறங்கி செயல்படுத்தி காட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சி குறுவை சாகுபடி செய்து சாதனை படைக்க இயலும் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×