search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை மீட்கும் பணி 8-வது நாளாக நீடிப்பு

    நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6-வது நபரை மீட்கும் பணி 8-வது நாளாக நீடிக்கிறது. பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    நெல்லை:

     நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் முருகன், விஜயன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம் என்பவர் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.

    பாறை இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 6-வது நபரான ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் அவரை  தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த பகுதியில் ராட்சத பாறைகள் விழுந்து கிடப்பதால் கடந்த 2 நாட்களாக அதனை அகற்ற வெடிவைத்து தகர்ந்து வருகின்றனர். இன்று 3-வது நாளாக பாறைகளுக்கு வெடி வைத்து தகர்த்து ராஜேந்தினை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு பணியினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

     இந்நிலையில் 400 அடி ஆழம் உள்ள குவாரியில் தண்ணீர்ஊற்று ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் அங்கிருந்து கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குவாரியில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களது உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதால் காக்கைகுளத்தை சேர்ந்த செல்வகுமாரின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர். இதேபோல் மற்ற 2 பேரின் உறவினர்களிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மங்களூருவில் கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நெல்லை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது.
    Next Story
    ×