search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    குப்பைகளை சேகரித்து விற்கும் திட்டத்தை மாநகராட்சி நீட்டிக்க கோரிக்கை

    திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை சேகரித்து விற்கும் திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி மாநகர் பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து அந்தந்த பகுதிகளில் வேலை செய்யும் துப்புரவு பணியாளர்களிடம் விற்பனை செய்தால் குப்பைகள் இல்லாத திருச்சி மாநகரம் ஆக உருவாகும் என்ற அடிப்படையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மாநகராட்சி ஒரு திட்டத்தை அமல்படுத்தியது.

    அந்தத் திட்டத்தின் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகள், பேப்பர் கழிவுகள், மின்சார கழிவுகள் உள்ளிட்டவைகள் கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரித்து அதில் உள்ள கழிவுகளை விற்பனை செய்யும் அளவிற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள் தரம் பிரித்து மக்குகின்ற குப்பைகளை நுண் உர செயலாக்க மையத்திற்கு எடுத்து வருவார்கள்.

    இதன் மூலம் அனைத்து வார்டு பகுதிகளிலும் குடியிருப்பாளர்கள் குப்பைகளை சாலைகளில் கண்ட இடங்களில் கொட்டாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்து வந்தனர். காலப்போக்கில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மாநகர் பகுதிகளில் அதிகமான இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு எங்கும் குப்பை மயமாக காட்சி அளிக்கிறது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை மீண்டும் தற்போது திருச்சி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்து செயல்படுத்த தொடங்கியுள்ளது. இந்த குப்பைகளை தரம் பிரித்து விற்பனை செய்யும் திட்டத்தை விட்டுவிடாமல் காலநீட்டிப்பு செய்தால்  பொது மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று திருச்சி மாநகர குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து திருச்சி மாநகரத்தை சேர்ந்த குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு திட்டங்கள் தற்போது திருச்சி மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    அந்தத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமலில் இருந்த குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களே விற்பனை செய்யும் திட்டத்தையும் மீண்டும் கால நீட்டிப்பு செய்தால் பொதுமக்களுக்கு உபயோகமாகவும், சுத்தமான நகரமாகவும் திருச்சி இருக்கும். இதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

    மின்சார கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை மறுசுழற்சி செய்பவர்களோடு மாநகராட்சி தரப்பில் ஒரு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குப்பைகளை தரம் பிரித்து விற்பனை செய்வதற்கு நிலையான விலையை தீர்மானம் செய்து கொள்ளலாம். 

    அதன் மூலமாக குப்பைகள் இல்லாத திருச்சி மாநகரத்தை உருவாக்கிக்கொள்ளலாம். பொதுமக்களும் குப்பைகளை சாலையில் கொட்டாமல் குப்பைகளை மறுசுழற்சி செய்பவர்களிடம் சரியாக ஒப்படைத்து விடுவார்கள் என்று தெரிவித்தார்.
    Next Story
    ×