search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வேலை வாங்கி தருவதாக பணமோசடியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

    ஜீவராஜ் வங்கி கணக்கு மூலமாக ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்தை கண்ணனிடம் கொடுத்துள்ளார். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.66 லட்சத்துக்கு மேல் கண்ணன் மோசடி செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ஜீவராஜ்(வயது 35). இவர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபுவிடம் மனு கொடுத்தார். அதில் இணையதளத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பந்தமான விளம்பரத்தைப் பார்த்து அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது திருப்பூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பேசியதாகவும், கனடா நாட்டில் உள்ள சாக்லெட் நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுக்க ரூ.10 லட்சம் ஆகும் என்று கூறியதாகவும், அதற்கு ஜீவராஜ் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய போது சிறிது சிறிதாக பணம் கொடுத்தால் போதும் மீதி தொகையை வேலை பார்த்து கொடுத்தால் போதும் என்று கண்ணன் கூறியுள்ளார்.

    இதை நம்பிய ஜீவராஜ் ரொக்கமாகவும், வங்கி கணக்கு மூலமாக ரூ.3 லட்சத்து 90 ஆயிரத்தை கண்ணனிடம் கொடுத்துள்ளார். பல நாட்களாகியும் வேலை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் காலம் கடத்தி வந்தார். இது தொடர்பாக விசாரித்த போது, கண்ணன் இது போல் பலரை ஏமாற்றி பணமோசடி செய்தது தெரியவந்தது என்று கூறியுள்ளார். 

    இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி துணை கமிஷனர் ரவி, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வேலுச்சாமி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், முதல்நிலைக் காவலர் குணசேகரன், ஆயுதப்படை காவலர் கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில், இதுபோல் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.66 லட்சத்துக்கு மேல் கண்ணன் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் நல்லூர் பகுதியில் கண்ணனை (52) கைது செய்து அவரிடமிருந்து சொகுசு காரை பறிமுதல் செய்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார். 

    இதுபோல் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து பணம் பறிக்கும் நபர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், பொதுமக்களிடம் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.


    Next Story
    ×