search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டத்தில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் பேசினார்
    X
    கூட்டத்தில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் பேசினார்

    ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பது நெஞ்சை பிளக்கும் செயலாக உள்ளது- தி.மு.க.வுக்கு மயூரா ஜெயக்குமார் கண்டனம்

    செல்போன்களின் மூலம் பல்வேறு நன்மைகளை சுலபமாக பெற முடிகிறது. இதற்கான முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தான்.
    மார்த்தாண்டம்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மார்த்தாண்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர்.பினுலால் சிங் தலைமை தாங்கினார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    இன்றைக்கு நாம் அனைவரும் செல்போன்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அதன் பயன்பாடுகளும் அதிகம் உள்ளது. செல்போன்களின் மூலம் பல்வேறு நன்மைகளை சுலபமாக பெற முடிகிறது. இதற்கான முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தான்.

    இன்று அனைவரும் கம்ப்யூட்டர் பயன்படுத்தி வருகிறோம். மாணவ - மாணவிகள் அனைத்து பஞ்சாயத்துக்கள், நிறுவனங்கள் என அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகித்தவர் ராஜீவ் காந்தி தான்.

    பல்வேறு வகைகளில் நம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற அவரை வெடிகுண்டு வைத்து சிதறடித்து விட்டனர் துரோகிகள். இந்த கொலை குற்றவாளிகளுக்கு அப்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது அதில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரை நம் கூட்டணி கட்சியான தி.மு.க. தலைவர் வரவேற்று கட்டியணைப்பது நெஞ்சைப் பிளக்கும் செயலாக உள்ளது.

    பேரறிவாளனை இன்று விடுதலை செய்த அதே உச்சநீதிமன்றம் தான் அன்று குற்றவாளி என கூறியது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குமரி மாவட்டத்தில் தான் அதிகம் படித்தவர்கள் உள்ளனர்.ஆகையால் இதனை கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.

    சாது மிரண்டால் காடு கொள்ளாது என திமுகவுக்கு எச்சரிக்கை விடுகிறேன். கட்டியணைத்த தி.மு.க. கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×