search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

    பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் தேர்தல்- தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க ஓ.பி.எஸ். இ.பி.எஸ். முடிவு?

    அ.தி.மு.க. வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    சென்னை:

    டெல்லி மேல்சபையில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜுன் 29-ந்தேதியுடன் முடிகிறது.

    இந்த காலி இடங்களுக்கு ஜுன் 10-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

    அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் இந்த பதவியை பெற அ.தி.மு.க.வில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    அவைத்தலைவர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தலைமைக்கழக மூத்த நிர்வாகிகள், அமைப்பு செயலாளர்கள் என 38 பேர் எம்.பி. பதவி கேட்டு கட்சி தலைமையில் கடிதம் கொடுத்துள்ளனர்.

    இதில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் ஜே.சி.டி. பிரபாகர், பா.வளர்மதி, தளவாய் சுந்தரம் ஆகியோர் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஜே.சி.டி.பிரபாகர் பேசும்போது, கட்சிக்காக உழைத்தவர்கள் நிறையபேர் உள்ளனர். இதில் யாருக்கு சீட்’ கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொன்னால் சிலருக்கு மன வருத்தம் ஏற்படும். எனவே நீங்களே யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து அறிவியுங்கள் அவ்வாறு அறிவிக்கும் போது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபராக, விபரம் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசும்போது டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர் சீனியராக விவரம் தெரிந்தவராக இருந்தால்தான் நல்லது. அப்படிப்பட்டவரை தேர்ந்தெடுத்து அனுப்பினால்தான் விவரமாக பேசுவார்கள் என்றார்.

    தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பேசும்போது, அம்மா மறைவுக்கு பிறகு ராஜ்யசபா தேர்தலில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

    எனவே இந்த தேர்தலில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் எம்.பி. பதவி கேட்டு மனு கொடுத்திருந்த 38 பேர்களின் பெயர்களை வாசிக்க முற்பட்டபோது கூட்டத்தில் இருந்தவர்கள் பெயர்களை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    அ.தி.மு.க. வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து வாய்ப்பு கேட்டிருந்த 38 பேர் பெயர் பட்டியலில் இருந்து 2 பேரை நேற்று தேர்ந்தெடுந்துள்ளதாகவும் அதில் ஒருவர் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்றே வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×