search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி திருவிழாவில் ஆர்வமாக பங்கேற்ற கிராம மக்களை படத்தில் காணலாம்.
    X
    மீன்பிடி திருவிழாவில் ஆர்வமாக பங்கேற்ற கிராம மக்களை படத்தில் காணலாம்.

    புகையிலைப்பட்டியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

    திண்டுக்கல் அருகே மத நல்லிணக்க மீன்பிடி திருவிழா புகையிலைப்பட்டியில் நடைபெற்றது.
    திண்டுக்கல் அருகே சிலுவத்தூர் புகையிலைப்பட்டியில் வலைபிடிச்சான்குளம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு இல்லாததால் குளம் வறண்டு காணப்பட்டது. 

    மேலும் விவசாயமும் பாதிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில் பருவமழை கடந்த ஆண்டு கைகொடுத்ததால் குளம் நிரம்பியது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்து சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பில் மீன் குஞ்சுகளை வாங்கி குளத்தில் விட்டனர்.

    தற்போது தண்ணீர் வற்றிய நிலையில் மீன்கள் வளர்ந்து காணப்பட்டது. இதனை தொடர்ந்து கிராம மக்கள் கலந்துகொண்ட மீன்பிடி திருவிழா நடைபெற்றது. 

    கண்மாய் கரையில் திரண்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். கட்லா, ரோகு, விரால், அயிரை உள்பட சிறு மீன்கள் முதல் 3 கிலோ எடை உள்ள மீன்கள் வரை பிடிபட்டன. கிடைத்த மீன்களை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சமூக ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் மீன்பிடி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக மழை இல்லாததால் குளம் வறண்டது.

    கடந்த ஆண்டு பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி காணப்பட்டதால் கிராம மக்கள் ஒன்றுகூடி மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தோம். மீன் குஞ்சுகளை குளத்தில் விட்டு தற்போது நன்கு வளர்ந்த நிலையில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று மீன்களை பிடித்தனர். 

    அதனை விற்பனை செய்யாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். மேலும் அருகில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்கின்றனர் என்றனர்.
    Next Story
    ×