search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தின் மூலப்பத்திரம் கலெக்டர் செந்தில்ராஜிடம் வழங்கப்பட்ட காட்சி.
    X
    அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தின் மூலப்பத்திரம் கலெக்டர் செந்தில்ராஜிடம் வழங்கப்பட்ட காட்சி.

    ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியக தின விழா

    இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை திருச்சி மண்டலம் சார்பில் பன்னாட்டு அருங்காட்சியக தினவிழா ஆதிச்சநல்லூரில் நடந்தது.
    செய்துங்கநல்லூர்:


    ஆதிச்சநல்லூரில் புதிதாக அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மண்டல இந்திய தொல் பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் அருண்ராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் பேராசிரியர் ராஜவேலு பேசுகையில், ஆதிச்சநல்லூரில் கடந்த காலத்தில் திறந்தவெளி சுரங்கம் இருந்துள்ளது. மேலும் சங்க காலத்தில் இடைச்சங்கமும் இந்த ஆதிச்சநல்லூரில் இருந்திருக்கலாம்.

    தற்போது முதல்வர் தர்மபுரி மாவட்டத்தில் அகழாய்வு மேற்கொண்டதில் 4200 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தை தெரிவித்துள்ளார். அது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதை விட பழமையான நாகரிகம் இந்த ஆதிச்சநல்லூர் நாகரிகம். இதன் வரலாறு தற்போது நடந்து வரும் அகழாய்வில் தெரியவரும் என்று அவர் பேசினார்.

    தொடர்ந்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பள்ளி வரலாற்றுத் துறை ஆசிரியர் மாணிக்கம், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதன் பின்னர் சிறப்பு விருந்தினர்களாக கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ் தனக்கும் தனது சொந்த உறவினர்களுக்கும் உரிய 5.5 ஏக்கர் நிலத்தை இலவசமாக அருங்காட்சியகம் அமைப்பதற்காக வழங்கினார்.  ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்திற்கான மூலப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அந்த மூலப் பத்திரத்தின் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் பெற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார் முத்துக்குமார், முன்னாள் ஓய்வு பெற்ற ஐ.ஜி மாசானமுத்து, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பன்னாட்டு அருங்காட்சியக விழாவில் ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் கலைக்கல்லூரி, பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி, பாளையங்கோட்டை சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி, பாளை சேவியர் கல்லூரி, சதக்கப்பதுல்லா அப்பா கல்லூரி தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத்துறை மாணவ-மாணவிகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி மண்டல உதவி தொல்லியல் கண்காணிப்பு பொறியாளர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.
    Next Story
    ×