search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சி தகுதித்தேர்வு

    அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை ஆற்றுப்படை அறக்கட்டளை நடத்தி வருகிறது. இதில் பங்கேற்பதற்கான தகுதித்தேர்வு 29ந் தேதி சென்னையில் நடக்கிறது.
    சென்னை:

    ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காகவும் ‘பெல்லோ சிட்டிசன்’ (சக மனிதர்கள் மேன்மை அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

    தகுதியும், திறமையும் வாய்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை வழங்கி வரும் ஆற்றுப்படை அறக்கட்டளை என்ற அமைப்புக்கு, பெல்லோ சிட்டிசன் தொண்டு நிறுவனம் தேவையான உதவிகளை செய்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தற்போது மருத்துவ படிப்புகளை மேற்கொண்டு வரும் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் ஆற்றுப்படை அறக்கட்டளை, தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த 150 ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்து வருகிறது.

    தகுதித்தேர்வு மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தினமும் 2 மணி நேர பயிற்சி என்ற அடிப்படையில் முறையான பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பிளஸ்2 தேர்வு எழுதி வரும் மாணவர்கள், கடந்த ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஏராளமானோர் தங்களையும் இந்த பயிற்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கூடுதலாக 100 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சியை அளிக்க ஆற்றுப்படை அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

    இந்த பயிற்சியில் சேருவதற்கான தகுதித்தேர்வு வருகிற 29ந் தேதி சென்னையில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. தகுதித்தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் https://forms.gle/NNatjCcLq9JuZPUD6 என்ற லிங்க் மூலம் தங்களது பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த தேர்வு சென்னையில் நேரடியாக நடைபெறும் என்றும், தேர்வு மையங்கள் குறித்த விவரம் விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தகுதித்தேர்வு குறித்து மேலும் விவரம் அறிய விரும்புபவர்கள் www.aatrupadaifoundation.com என்ற இணையதள முகவரி மற்றும் 6381128698, 6383999064 என்ற செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×