search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர்களை சேர்த்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுங்கள்- நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் உத்தரவு

    சினிமா சூட்டிங்கில் இருந்தாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தே ஆன்லைன் கூட்டங்கள் வாயிலாகவும் கட்சி நிர்வாகிகளை கமல் சந்திக்க தவறுவது இல்லை என்கிறார்கள் கட்சியினர்.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டு தோல்வி அடைந்தார். உள்ளாட்சி தேர்தலிலும் கமல் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    கமல்ஹாசன் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்த போதிலும் கட்சியின் கட்டமைப்பு கிராமங்கள் வரையில் இல்லாததே அந்த கட்சி வெற்றி பெற முடியாததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கிராமங்கள் தோறும் கட்சியை பலப்படுத்தும் வகையில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும், கிராமங்கள் தோறும் மக்கள் நீதி மய்யம் கொடி பறக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

    கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் கட்சி அலுவலகத்தில் உரையாடும்போதும், வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களின் போதும் கமல்ஹாசன் இந்த கருத்தை தவறாமல் முன் வைக்கிறார்.

    மாவட்ட செயலாளர்களுடன் நீங்கள் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் எனது இந்த கருத்தை எடுத்துக்கூறி கட்சியை வலுப்படுத்த கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் அனைவரையும் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். தேர்தல் வெற்றிக்கு அது தான் கைகொடுக்கும் என்றும் கமல்ஹாசன் கட்சியினருக்கு நம்பிக்கையூட்டி வருகிறார்.

    கிராமங்கள் தோறும் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் அதே நேரத்தில் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் கட்சியினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிவுறுத்தி இருக்கிறார்.

    இதனை ஏற்று கட்சி நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ரேஷன் கடைகளில் சரியான முறையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பது பற்றி அவ்வப்போது ஆய்வு செய்யும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் இதுதொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரவாயல் பகுதியில் ரேஷன் கடை ஒன்றில் வேறு பகுதிகளில் உள்ள கார்டுகளுக்கு 20-ந்தேதிக்கு பிறகுதான் பொருட்கள் வழங்கப்படும் என்று கடை ஊழியர்கள் கூறியதால் மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ரேஷன் கடைக்கு நேரில் சென்று அதனை தட்டிக்கேட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதை வீடியோவாக பதிவு செய்து அதனை ‘மய்யக்களம்’ என்ற பெயரில் வெளியிட்டும் வருகிறார்கள்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியில் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வருகிற பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகங்களில் மக்களோடு மக்களாக நின்று அவர்களது புகார் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதையும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    மக்களிடம் செல்... மக்களோடு நில்...

    மக்களிடம் செல்... மக்களோடு நில் என்கிற முழக்கத்துடன் கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். இதனை மனதில் வைத்தே கட்சியினர் தீவிரமாக மக்கள் பணியாற்றி வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    சினிமா சூட்டிங்கில் இருந்தாலும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தே ஆன்லைன் கூட்டங்கள் வாயிலாகவும் கட்சி நிர்வாகிகளை கமல் சந்திக்க தவறுவது இல்லை என்கிறார்கள் கட்சியினர்.

    அடுத்த கட்டமாக மக்களை நேரில் சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். அதற்கான சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது.

    Next Story
    ×