search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறுந்து விழுந்த மின் வயர்.
    X
    அறுந்து விழுந்த மின் வயர்.

    வீ.கே.புதூர் அருகே சாலையில் அடிக்கடி அறுந்து விழும் மின் வயர்-நிரந்தர தீர்வு காண கோரிக்கை

    வீ.கே.புதூர் அருகே சாலையில் அடிக்கடி அறுந்து விழும் மின் வயரால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    வீ.கே.புதூர்:

    கீழப்பாவூர் யூனியன் கல்லூரணி ஊராட்சியில்  ஊரணி எதிரே உள்ள மின் கம்பி அடிக்கடி அறுந்து விழுந்து வருகிறது.

     இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை பாவூர்சத்திரம் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் பணியை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் அதேபோல் கடுமையான சூறைக் காற்று வீசியது. அப்போது மின்கம்பி மீண்டும் அறுந்து விழுந்தது.

    அந்த நேரத்தில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று அந்த வழியாக சென்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக  நூலிழையில்  பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர்.  அங்கு நின்ற பொதுமக்கள் விரைந்து சென்று தற்காலிகமாக மின்சாரத்தை தடை செய்தனர்.

    கடந்த டிசம்பர் மாதம் மின்கம்பி அறுந்து விழுந்து கல்லூரணியை சேர்ந்த தற்காலி ஊழியர் ஒருவர் டிரான்ஸ்பார்மரில் வேலைபார்க்கும் போது உயிர் இழந்து விட்டார்.

    கடந்த ஒரு வருடமாக இந்த மின்சார வயர் அடிக்கடி அறுந்து விடுவதாகவும் நிரந்தரமாக தீர்வு வேண்டி,  கல்லூரணியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் ஒரு வருடத்திற்குள்  3 முறை மின்வயர் தொடர்ந்து அறுந்து விழுவது தொடர்பாக பாவூர்சத்தி்ரம் உதவி பொறியாளருக்கு மனு எழுதி இருக்கிறார்.

    வயர்மேன், போர்மேன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை நேரில் சென்று நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மின்வாரிய ஊழியர்களும் நிரந்தர தீர்வு தரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்காமல் பெயரளவிற்கு  செயல்பட்டு உள்ளனர் என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    தற்போது மின்வயர் அறுந்து விழுந்த காட்சி மற்றும் பள்ளிவாகனம் அதனை கடந்து சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×