search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்த காட்சி.
    X
    கீரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்த காட்சி.

    கீரம்பூர், திண்டமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு

    கீரம்பூர், திண்டமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு செய்தார்.
    நாமக்கல்:

    கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து கல்வி கற்க இயலாத சுழல் இருந்தது. 
    தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும், கற்றல் திறனை வலுப்படுத்தவும், 2 ஆண்டு காலமாக நிலவிய கற்றல் இடைவெளியை போக்கவும் தமிழக முதல்- அமைச்சர் இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சமுதாய கூடம் போன்ற பொது இடங்களில் போதிய இடைவெளியில் மாணவ, மாணவியர்கள் அமர வைத்து தன்னார்வலர்களைக் கொண்டு எளிய முறையில், தினசரி 1 மணிநேரம் முதல் 1.30 மணி நேரம் வரை கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.

     நாமக்கல் மாவட்டத்தில் மாணவ - மாணவியர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே உள்ள இடங்களில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலமாக 4,553 பெண் தன்னார்வலர்கள் மூலம் 62,083 மாணவ- மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

    இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி திட்ட வகுப்பினை பார்வையிட்டார். 

    தொடர்ந்து கீரம்பூர் அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு,  ஊராட்சியின் மூலம் துணை சுகாதார நிலையத்திற்கு குடிநீர் வசதி கிடைப்பதை செவிலியரிடம் கேட்டறிந்தார். 

    மேலும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எடை பார்க்கும் கருவி, 1 வயதிற்கு குறைவான குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிப்பதற்கான எடை பார்க்கும் கருவி ஆகியவை இருப்பதை பார்வையிட்டு உறுதி செய்தார். 

    தற்போது மகப்பேறு சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரங்களையும், அவர்களுக்கு அரசு அறிவுறுத்தியபடி குறித்த கால இடைவெளியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதையும், தடுப்பூசி போட வேண்டிய குழந்தைகளின் விவரங்களையும் பதிவேடுகளை பார்வையிட்டு, செவிலியரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். 

    குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டால் அவர்களின் உடல் நிலையை சீராக்க ஓ.ஆர்.எஸ் கரைசல் பொட்டலங்கள் உள்ளனவா என்றும், காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள் இருப்பில் உள்ளனவா என்றும், கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான பரிசோதனை கருவி உள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    அதனைத்தொடர்ந்து திண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்   பதிவேடுகள் மற்றும் கருவிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

    இந்த ஆய்வுகளின்போது துணை இயக்குநர் (சுகாதாரம்) பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர்  ராஜேந்திரன் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×