search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சாயல்குடி அருகே ஆள்மாறாட்டத்தில் பாட்டியை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது

    சாயல்குடி அருகே ஆள்மாறாட்டத்தில் பாட்டியை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியம்மாள்(வயது 75). இவரது கணவர் இறந்து விட்டதால் தனது மகன் மலையப்பன் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மாரியம்மாள், மகன் வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மலையப்பனின் மனைவி கன்னியம்மாள் வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது ஒரு நபர், மூதாட்டி மாரியம்மாளை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினார். அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ், சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்பு மாரியம்மாளின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாரியம்மாளை வெட்டிக் கொன்றது யார்? எதற்காக கொன்றார்? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    மாரியம்மாளின் மகன் மலையப்பனுக்கு கன்னியம்மாள் 2வது மனைவி ஆவார். முதல் மனைவிக்கு மணிமேகலை என்ற மகளும், மணிபாரதி என்ற மகனும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே மலையப்பனை பிரிந்து அவரது முதல் மனைவி தனது பிள்ளைகளுடன் தூத்துக்குடிக்கு சென்று விட்டார். அங்கேயே அவர் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.

    மலையப்பனின் 2வது மனைவி கன்னியம்மாளுக்கு குழந்தை இல்லை. இதனால் மாரியூர் கிராமத்தில் மலையப்பன் பெயரில் உள்ள வீட்டுமனையை, முதல் மனைவியின் மகன் மணிபாரதி தனக்கு எழுதிக் கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளார்.

    இதற்காக அவர் அடிக்கடி மாரியூர் கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார். ஆனால் வீட்டுமனையை கொடுக்க மலையப்பன் மற்றும் அவரது 2வது மனைவி கன்னியம்மாள் மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் அவர்கள் இருவரின் மீதும் மணி பாரதிக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக அவர்களை கொல்ல திட்டமிட்ட மணிபாரதி நேற்று அதிகாலை மாரியூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

    வீட்டின் வெளியே படுத்திருப்பது சித்தி கன்னியம்மாள் என நினைத்து, பாட்டி மாரியம்மாள் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். பின்பு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சாயல்குடி போலீசார் மணிபாரதியை வலைவீசி தேடி வந்தனர்.

    அவர் சொந்த ஊரான தூத்துக்குடியில் பதுங்கி இருக்கலாம் என்று கருதி நேற்று தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான போலீசார், கீழக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பஸ் வந்தது.

    அந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது மாரியம்மாள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மணிபாரதி அந்த பஸ்ஸில் இருந்தார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    மாரியம்மாளை கொன்றுவிட்டு கீழக்கரையில் உள்ள ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த மணிபாரதி, இன்று காலை ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். அப்போதுதான் போலீசார் இந்த சோதனையில் சிக்கி கொண்டார்.

    கைது செய்யப்பட்ட மணி பாரதியை சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×