search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    தென்மேற்கு பருவ மழைக்கு முன்குளம், குட்டைகளை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

    பல ஆயிரக்கணக்கான விவசாய கிணறுகள், போர்வெல்களை ஆதாரமாகக்கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    மடத்துக்குளம்:

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை, வாழை, கரும்பு, நெல், மக்காச்சோளம், எண்ணைவித்துக்கள், காய்கறி பயிர்கள் என 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    அமராவதி, பி.ஏ.பி., ஆகிய பாசன திட்டங்களுக்கு இணையாக குளம், குட்டைகளை ஆதாரமாக கொண்ட இறவை மற்றும் மானாவாரி பாசனத்திலும் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான விவசாய கிணறுகள், போர்வெல்களை ஆதாரமாகக்கொண்டு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் 3,624 குட்டைகள், 2,118 குளங்கள் மற்றும் இவற்றுக்கு நீர் வரும் ஓடைகள் பல ஆயிரம் கி.மீ., தூரம் அமைந்துள்ளன. ஓடைகளின் குறுக்கே ஆயிரக்கணக்கான தடுப்பணைகளும் அமைந்துள்ளன. இதில் உடுமலை ஒன்றிய கிராமங்களில் 133 குளம், குட்டைகள் உட்பட குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியம் என 500-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளும், 1,200க்கும் மேற்பட்ட ஓடை மற்றும் தடுப்பணைகளும் அமைந்துள்ளன.

    மழைநீரை சேமித்து பயன்படுத்தும் சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டிருந்த நிலையில் நீர் நிலைகள் மீதான அலட்சியம் காரணமாக குளம், குட்டைகள், ஓடைகள் ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டியும் காணப்படுகிறது. 

    ஓடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வழித்தடங்கள் மாயமாகி குளம், குட்டைகள் நீர் வரத்தின்றி அடையாளத்தை இழந்து, மண் மூடியும்  சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும் பெரும்பாலான குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன.

    மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 618.20 மி.மீ., மழைப்பொழிவு இருந்தாலும், தென்மேற்கு, வட கிழக்கு பருவ மழை காலத்தில் மட்டும் செழிப்பாக உள்ளது. 

    பெய்யும் மழை நீரை சேமிக்கும் இயற்கை ஆதாரங்களான குளம்,குட்டைகள் மற்றும் ஓடைகளை கண்டு கொள்ளாததால் ஒரு சில மாதங்கள் மழை பெய்யாவிட்டாலும் கடும் வறட்சியை சந்திக்க வேண்டியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விவசாயம் பாதிக்கிறது. குடிநீருக்கு கூட தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    தற்போது கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெரும்பாலான குளம், குட்டைகள் வறண்டு வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. 

    அவ்வப்போது, கோடை மழை பெய்து வந்தாலும் அதிக மழை பொழிவு வழங்கும் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமிக்கும் வகையில் கிராமங்களில் உள்ள குளம், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளை தூர்வாரவும், நீர் வழித்தடங்களை புதுப்பிக்கவும் ஊராட்சி நிர்வாகங்கள், ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
    Next Story
    ×