search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருச்சி அருகே பிளக்ஸ் போர்டை அகற்ற முயன்ற 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலி

    பிளக்ஸ் போர்டு வைத்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நெ.1 டோல்கேட்:

    திருச்சியை அடுத்த நெம்பர் 1 டோல்கேட் அருகேயுள்ள மேனகா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக விஸ்தரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் தற்போது பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகேயுள்ள தென்னக்கரை கிராமத்தை சேர்ந்த சேட்டு (வயது 36), விமல் (28) ஆகிய 2 பேரும் ஈடுபட்டிருந்தனர் லால்குடி அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் செல்லதுரை (47) இவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே அந்த அடுக்குமாடி குடியிருப்பு அருகே வீடு வாடகைக்கு விடுவது தொடர்பாக அந்த குடியிருப்பின் உரிமையாளர் விளம்பர பிளக்ஸ் போர்டு ஒன்றை வைத்திருந்தார்.

    இதற்கு அவர் முறையான அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று இரவு மற்றும் இன்று காலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அந்த பிளக்ஸ் போர்டு கீழே சாய்ந்து விழுந்தது. இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த பெயிண்டர்கள் மற்றும் காவலாளி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அந்த பிளக்ஸ் போர்டை நிமிர்த்தும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பிளக்ஸ் போர்டு அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதில் எதிர்பாராதவிதமாக அதில் மின்சாரம் பாய்ந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மூவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சேட்டு, செல்லத்துரை ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். விமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் இறந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×