search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் சோதனை
    X
    போலீசார் சோதனை

    லஞ்சம் வாங்கி கைதான வணிக வரி அதிகாரி-எழுத்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    திருப்பூரில் லஞ்சம் வாங்கி கைதான வணிக வரி அதிகாரி-எழுத்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    கோவையை சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனது மனைவியுடன் சேர்ந்து திருப்பூரில் கடந்த 2008-ம் ஆண்டு ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். கேரள மாநிலத்துக்கு பொருட்களை அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு திருப்பூரில் உள்ள நிறுவனத்தை மூடினார்.

    இந்தநிலையில் அந்த நிறுவனத்துக்கான கடந்த 2011ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான 2 சதவீத வரியை வணிக வரித்துறைக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தார். அதற்காக சி படிவம் மூலமாக நிலுவை தொகையை செலுத்துவதற்கு திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வணிக வரி அலுவலகம் வடக்கு வட்டம் 2-ன் உதவி கமிஷனர் ஜெயகணேசன் (வயது 44), பெண் எழுத்தர் ரத்னா (40) ஆகியோரை தொடர்பு கொண்டார். அவர்கள் நிலுவையில் உள்ள ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 572 செலுத்துமாறு கூறினார்கள். அந்த தொகையை செலுத்திய குணசேகரன் வரி நிலுவையில்லா சான்றிதழ் வழங்குமாறு கூறியுள்ளார்.

    ஆனால் வரி நிலுவையில்லா சான்றிதழ் வழங்குவதற்காக, தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று உதவி கமிஷனர் ஜெயகணேசன் கேட்டுள்ளார். அதற்கு குணசேகரன் தன்னால் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளார். இதை த்தொடர்ந்து ஜெயகணேசன் ரூ.7 லட்சமும், எழுத்தர் ரத்னா ரூ.2 லட்சமும் லஞ்சமாக கேட்டுள்ளனர். இதனால் குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை குணசேகரனிடம் கொடுத்து அனுப்பினர். அவர் வணிகவரி அலுவலகத்துக்கு சென்று உதவி கமிஷனர் ஜெயகணேசனிடம் ரூ.7 லட்சத்தையும், எழுத்தர் ரத்னாவிடம் ரூ.2 லட்சத்தையும் கொடுத்தார்.

    அவர்கள் அந்த பணத்தை வாங்கி பையில் வைத்தப்போது அங்கு தயாராக இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணா மூர்த்தி, இன்ஸ்பெக்டர் சசிரேகா மற்றும் போலீசார் விரைந்து சென்று கையும், களவுமாக உதவி கமிஷனர் ஜெயகணேசன், எழுத்தர் ரத்னா ஆகிய 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.9 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே உடுமலையில் உள்ள வணிக வரி உதவி கமிஷனர் ஜெயகணேசன் வீடு மற்றும் பல்லடத்தில் உள்ள எழுத்தர் ரத்னா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×