
தமிழகம் முழுவதும் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது திருச்சி மத்திய பேருந்து நிலையம், தில்லை நகர், தென்னூர், மணப்பாறை, முசிறி உள்ளிட்ட செயல்பட்டு வரும் ஹோட்டல்கள் மற்றும் அசைவ உணவகங்களில் தயார் செய்யப்படும் இறைச்சி வகைகள் கெட்டுப்போனதாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுவது உறுதியானது.
இதையடுத்து அந்த புகார்களின் அடிப்படையில் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள்.
அப்போது மாவட்டம் முழுவதும் சுமார் 47 கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில் சுமார் 138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இதை விற்பனைக்காக வைத்திருந்த கடைகளுக்கு எச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கி எச்சரித்தனர். மேலும் நான்கு கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், அசைவ உணவகங்கள் ஓட்டல்கள் நடத்தும் உரிமையாளர்கள் முதலில் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்கள் ஓட்டல்களில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு தரமில்லாத பொருட்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.