
வளைகுடா நாடான சார்ஜாகோவை இடையே ஏர் அரேபியா விமான இயக்கப்படுகிறது. நேற்று காலை இந்த விமானம் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உகாண்டா நாட்டில் இருந்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து அந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அதிகாரிகள் அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அந்த பெண்ணின் வயிற்றில் ஏதோ மர்ம பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. ஆனால் அந்த பொருள் என்ன என்று தெரியவில்லை.
இதனையடுத்து உகாண்டா நாட்டு பெண்ணை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணை மருத்துவ கண்காணிப்பில் வைத்து அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். பெண்ணின் வயிற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்ச மாக அவர் கடத்தி வந்த பொருள் வெளியேறியது. அவற்றை ஆய்வு செய்தபோது அந்த பொருள் அதிக விலை கொண்ட போதைப்பொருட்கள் என்பது தெரியவந்தது.
வெளிநாட்டில் இருந்து வந்த அந்த பெண், போதைப்பொருள்களை கேப்சூல் வடிவில் அடைத்து அதனை உட்கொண்டு கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
நடிகர் சூர்யா நடித்த அயன் படத்தில் இதேபோன்று போதைப் பொருளை கேப்சூலாக மாற்றி கடத்தி வரும் காட்சி வரும். அதேபோல சினிமா பட பாணியில் உகாண்டா பெண் போதைப்பொருளை கடத்தி கோவைக்கு வந்துள்ளார்.
இன்னும் உகாண்டா பெண்ணின் வயிற்றில் இருந்து முழுமையாக போதைப்பொருள் வெளியேறவில்லை. எனவே தொடர்ந்து அதிகாரிகள் அந்த பெண்ணை மருத்துவ கண்காணிப்பில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பெண்ணின் வயிற்றில் இருந்த போதைப்பொருள் என்ன போதைப்பொருள் என்பது தெரியவில்லை. இதனை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சோதனை முடிவில் தான் அது என்ன போதைப்பொருள் என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பெண்ணுடன் தொடர்புடையவர்கள் யார், அவர் யாருக்காக கடத்தி வந்தார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது. உகாண்டா பெண்ணுடன் வேறு யாரும் இதேபோல் கேப்சூல் வடிவில் போதை பொருட்கள் கடத்தினார்களா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.