
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப் முல்லைபெரியாறு பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருந்தபோதும் அவ்வப்போது ரகசியமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை அறிந்ததும் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் கூடலூர் குருவனாற்று வண்ணாந்துரை பகுதியில் தடுப்பணை அமைத்து குழாய் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டனர்.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என சலவை தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நேற்று மாலை அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர்களைந்து சென்றனர்.
லோயர்கேம்ப் முல்லைபெரியாற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் தேனி மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே வைகை அணையை தூர்வாரி அங்கிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இன்று கூடலூர் புதிய பஸ்நிலையம் அருகே விவசாயிகள் மற்றும் சலவை தொழிலாளர்கள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும். எனவே அதற்கான நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொரும் என அவர்கள் தெரிவித்தனர்.