search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களும் சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்
    X
    தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களும் சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்

    கேரளாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் ஷவர்மா- 3 கல்லூரி மாணவர்கள் பாதிப்பு

    தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்திமயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சாவூர்:

    கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி தேவநந்தா என்பவர் உயிரிழந்தார். பலர் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டு போன பிரியாணி சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்டோர் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்திமயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவமாணவிகள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (வயது 22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    ஷவர்மா

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 பேரும் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். விடுமுறை முடிந்து நேற்று கல்லூரிக்கு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 3 பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே உள்ள துரித உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டனர். பின்னர் விடுதிக்கு சென்றனர்.

    அங்கு சக மாணவர்களுடன் நாங்கள் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு வந்தோம் என பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பிரவீன் உள்ளிட்ட 3 பேருக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு அடுத்தடுத்து வாந்தி எடுத்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இந்த செயலால் சக மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர். உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருப்பினும் உடல் ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். கெட்டுப்போன சிக்கனை கொண்டு ஷவர்மா தயார் செய்யப்பட்டதா என்பது என சோதனை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×