search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அந்தமான் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இன்று காலையில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. சில நேரங்களில் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் வீசிய இந்த சூறாவளி காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

    இதனால் இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகிற 8-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நாட்களில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8-ம் தேதிக்கு பிறகு புயலாக மாறுமா? என்பது பற்றி வானிலை மைய அதிகாரிகள் இன்னும் தகவல்களை வெளியிடவில்லை.

    இருப்பினும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8-ம் தேதிக்கு பிறகு ஒடிசா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே,  தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாளை முதல் 9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பால விடுதி, திண்டுக்கல் காமாட்சிபுரத்தில் தலா 9 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

    இதையும் படியுங்கள்..  தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஈத்காவிற்கு நிலம் தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்
    Next Story
    ×