search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தோசை
    X
    தோசை

    வணிக சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி- இட்லி, தோசை, காபி விலை உயர்வு

    வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு ஓட்டல் தொழிலை கடுமையாக பாதித்து உள்ளது. உணவு பண்டங்கள் அனைத்தின் விலையும் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.
    சென்னை:

    பெட்ரோல்-டீசலை போலவே கியாஸ் விலையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு சிலிண்டர் விலை ரூ.1300 ஆக குறைந்தது. தற்போது ரூ.2500 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விலை உயர்வு ஓட்டல் தொழிலை கடுமையாக பாதித்து உள்ளது. உணவு பண்டங்கள் அனைத்தின் விலையும் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.

    30 ரூபாய்க்கு விற்பனையான 2 இட்லி ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ரூ.25க்கு விற்கப்பட்ட காபி ரூ.28 முதல் ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. டீ விலை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோல் பூரி, பொங்கல், தோசை, கிச்சடி உள்பட அனைத்து வகை உணவுகளும் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.

    மதிய சாப்பாடு ரூ.120 ல் இருந்து ரூ.130ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறியதாவது:-

    சிலிண்டர் மட்டுமல்ல எண்ணெய், மளிகை என்று எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. எனவே உணவு பண்டங்கள் மீதான விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது. இதனால் அடிக்கடி ஓட்டலுக்கு குடும்பத்துடன் வருபவர்கள் இப்போது அதை குறைத்து கொள்கிறார்கள்.

    ரூ.115க்கு விற்ற சமையல் எண்ணெய் ரூ.200 ஆகி விட்டது. சரி, இறக்குமதியாகும் எண்ணெய் விலைதான் உயர்கிறது என்றால், உள்ளூர் உற்பத்தியான நெய் விலை கூட உயர்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இந்த பொருட்களை அடிப்படையாக கொண்டுதான் ஓட்டல் தொழில் நடக்கிறது.

    உதாரணமாக காலை 6 மணிக்கு தோசை கல்லை சூடாக்கினால் தொடர்ந்து இரவு வரை கியாஸ் எரிந்து கொண்டே இருக்க வேண்டும். 150 டிகிரி முதல் 200 டிகிரி வரை வெப்பம் குறையாமல் இருந்தால்தான் தோசை சுட முடியும். இப்படி ஒவ்வொன்றிலும் பிரச்சினை உள்ளது.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் அதன் தாக்கம் ஒவ்வொன்றிலும் எதிரொலிக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×