search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமைச் செயலகம்
    X
    தலைமைச் செயலகம்

    தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்புகள்

    தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைத்தளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    1.தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செயல்முறை மேலாண்மை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான கொள்கை உருவாக்கப்படும். 

    2. திருநெல்வேலி கங்கைகொண்டானில் உள்ள எல்கோசெசில் (ELCOSEZ), தற்போதைய தகவல் தொழில்நுட்ப கட்டடத்தில் மொத்தம் 30000 சதுர அடியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான ஆயத்த அலுவலக இட வசதி ரூ.6 கோடி செலவினத்தில் நிறுவப்படும். இதற்கான செலவினத்தை எல்காட் நிறுவனம் ஏற்கும்.

    3. ஓசூர் விஸ்வநாதபுரத்தில் உள்ள எல்கோசெசில் (ELCOSEZ), தற்போதைய தகவல் தொழில்நுட்ப கட்டடத்தில் மொத்தம் 27461 சதுர அடியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்களுக்கான ஆயத்த அலுவலக இட வசதி ரூ.6.86 கோடி செலவினத்தில் நிறுவப்படும். இதற்கான செலவினத்தை எல்காட் நிறுவனம் ஏற்கும்.

    4. சென்னை கோட்டூர்புரத்தில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தனித்துவ வளாகம் 2.6 லட்சம் சதுர அடியில் ரூ.150 கோடி செலவினத்தில் அமைக்கப்படும். இதற்கான செலவை எல்காட் நிறுவனம் ஏற்கும்.

    5. தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைத்தளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    6. தமிழ்நாடு டிஜிட்டல்மயமாக்கும் வியூகத்தின் நோக்கத்தை எய்திடும் வகையில் மின்னாளுகைத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான வரவு-செலவு திட்ட ஒதுக்கீடு ஒவ்வொரு துறைக்கும் ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

    7. தகவல் தொழில்நுட்பவியல் துறை, ‘தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை’ என மறுபெயரிடப்படும்

    8. கணினித் தமிழுக்கான மென்பொருட்களை உருவாக்குவதற்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்களிடம் இருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ள. இவை ஆய்வு செய்யப்பட்டு பயனுள்ள திட்டங்கள் ரூ.2 கோடி செலவினத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் செயல்படுத்தப்படும்.

    9.முதுநிலை தமிழியல் படிப்பு ரூ.29 லட்சம் செலவினத்தில்,செலவினத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் துவக்கப்படும்.

    10. தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு தேவைப்படும் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் இதர உபகரணங்கள் ரூ.1 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்

    11. மின்னூலகம் 1 லட்சம் மின்னூல்களைக் கொண்ட பல்லூடக மின்னூலகமாக ரூ.1 கோடி செலவில் மேம்படுத்தி நவீனமயமாக்கப்படும்.

    12. தமிழ்நாடு கலாச்சார மின் நிலவரை ஏடு/தொகுப்பு என்பது தமிழ்நாடு பற்றிய விரிவான கலாச்சார தகவல்களைத் தொகுத்து பொதுமக்கள் காணும்படியாக வழங்கும் ஒரு கல்வி/அறிவுசார் வளமாகும். இதில் உள்ள ஆவணப்படுத்தப்பட்ட மின் உள்ளடக்கங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வரைபடக் காட்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் வலைத்தளத்தில் நில வரைபடமாக பதிவேற்றப்படும். முதற்கட்டமாக மதுரை மண்டலத்தில் உள்ள மாவட்டங்களுக்கான கலாச்சார மின் நிலவரைத் தொகுப்பு, சுமார் ரூ.1 கோடி செலவினத்தில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் உருவாக்கப்படும்.

    13. கன்னியாகுமரியில் 50000 சதுர அடியில் ஆயத்த அலுவலக இடவசதியுடன் புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடம் ரூ.50 கோடி உத்தேச செலவினத்தில் உரிய ஆய்வுக்குப் பிறகு அமைக்கப்படும். இது தென்தமிழ்கத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உதவும்.
    Next Story
    ×