search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறக்கப்பட்ட பதநீர்.
    X
    இறக்கப்பட்ட பதநீர்.

    களக்காடு பகுதியில் பதநீர் விற்பனை அமோகம்- 1 லிட்டர் 60 ரூபாய்

    தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பனை மரங்களில் இருந்து பதநீர் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம், களக்காடு, சிதம்பரபுரம், சாலைப்புதூர், மாவடி, மலையடிபுதூர், திருக்குறுங்குடி, ராஜபுதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன.

    தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையில் இந்த பனை மரங்களில் இருந்து பதநீர் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் அதிகாலையில் பனை மரங்களில் ஏறி ஏற்கனவே பனை மரங்களில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் மண் கலசங்களில் இருந்து பதநீர் இறக்குகின்றனர்.

    பொதுமக்கள் பதநீர் இறக்கும் இடங்களுக்கு சென்று பதநீர் வாங்கி அருந்துகின்றனர். ஒரு லிட்டர் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வியாபாரிகள் தொழிலாளர்களிடம் பதநீரை கொள்முதல் செய்து ஊர் பகுதிகளில் வீடு, வீடாகவும் பதநீர் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பனை ஏறும் தொழிலாளி சிதம்பரபுரத்தை சேர்ந்த கணேசன் கூறுகையில், இப்பகுதிகளில் முன் காலத்தில் ஏராளமானோர் பனை ஏறும் தொழில் செய்து வந்தனர். ஆனால் தற்போது விரல் விட்டும் எண்னும் வகையில் ஒரு சிலர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். அதிக வருமானம் கிடைப்பதில்லை என்பதாலும், 3 மாத தொழிலாக இருப்பதாலும் இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றார்.

    களக்காட்டை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வக்கீல் மணிகண்டன் கூறும் போது, இயற்கை அன்னையின் நன்கொடையான பனை மரங்களையும், அதிலிருந்து கிடைக்கும் மகத்துவமிக்க பொருட்களையும் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் பனை ஏறும்  தொழிலை ஊக்கப்படுத்தினால் மட்டுமே முடியும்.

    எனவே அரசு பனை ஏறும் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பனை ஏறும் தொழிலை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

    சிதம்பரபுரத்தை சேர்ந்த சங்கர் கூறுகையில், குறைந்தளவு தொழிலாளர்களே பனை ஏறும் தொழிலில் ஈடுபடுவதால் பனை மரங்கள் இருந்தும் போதியளவு பதநீர் கிடைப்பதில்லை. பதநீர் தட்டுப்பாடை போக்க இளைஞர்களிடையே பனை ஏறும் தொழிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
    Next Story
    ×