search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலாத்தலங்கள்
    X
    சுற்றுலாத்தலங்கள்

    கொடைக்கானலில் பொதுமக்கள் அறிந்திடாத பழமையான சுற்றுலா இடங்கள்

    கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய அரியவகை சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் உள்ளது. மேல் மலை கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு அரிய வகை அருவி உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் எப்போதும் குளுமையான சீசனை அனுபவிக்க நாள்தோறும் எராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் நகரைச் சுற்றியுள்ள மோயர்சதுக்கம், பில்லர் ராக், குணா குகை, பைன் மரச்சோலை, பசுமைப்பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, படகு குழாம் போன்ற சுற்றுலா இடங்களை மட்டும் கண்டு ரசித்து செல்கின்றனர். அதன் பின்னர் மேல் மலை கிராமத்தில் உள்ள ஒரு சில இடங்களை மட்டும் கண்டு ரசித்துச் செல்கின்றனர். இவைகளைக் கண்டு ரசிப்பதற்கு ஒரு நாள் அல்லது 2 நாள் மட்டுமே அறை எடுத்து தங்கி விட்டுச் செல்கின்றனர்.

    ஆனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய அரியவகை சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் உள்ளது. மேல் மலை கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு அரிய வகை அருவி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியை முறையாக சீர்செய்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்க முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால் இவ்விடம் வனத்துறையால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

    இதேபோல் பேத்துப்பாறை கிராமத்தில் ஐந்து வீடு அருவி, ஓராவி அருவி, ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள், கல்திட்டைகள் என சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய இதுவரை அறிந்திராத அரிய இடங்கள் நிறைந்துள்ளன. இதேபோல் அடுக்கம் பகுதியிலும் ஆதிமனிதன் வாழ்ந்த கல்திட்டைகளும், சுவர் சிற்பங்களும் நிறைந்துள்ளன. இவைகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.

    மேலும் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி கிராமத்தில் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலைப்போல் வரலாற்று சிறப்புமிக்க பண்டையகால முருகன் கோவில் உள்ளது. இங்கும் பழங்கால கல்வெட்டு ஒன்று கோவிலின் சிறப்பை பற்றி பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களுடன் உள்ளது. மேலும் இதே பகுதியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற அருவியும் உள்ளது. தற்போது இந்த கோவிலை பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவிலாக அறங்காவல் குழு ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    இப்பகுதியையும் இங்குள்ள அருவியையும் சீரமைத்து சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக மாற்ற வேண்டும். இவ்வாறு புதுமையாக அமைந்துள்ள இவ்விடங்களை புதிய சுற்றுலா தலங்களாக மாற்றியமைத்தால் கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சி அடைவதோடு கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவதால் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவது குறைவதோடு பல்வேறு இடங்களுக்கும் அவர்கள் செல்லும் நிலை உருவாகும்.

    மேலும் இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வரலாற்றுச் சான்றுகள் ஏதேனும் கிடைக்கிறதா? என்பதையும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×