search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    உழைப்பாளர் தினத்தில் போராடி பெற்ற உரிமைகளை பேணிகாக்க உறுதியேற்போம்- சீமான் அறிக்கை

    தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, உழைப்பாளிகளுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைப்பாளர்களின் உரிமை முழக்கத்திற்கான திருநாள்தான், மே நாள் நவீன காலம் தொழிற்கருவிகள் கண்டுபிடிப்போடு மட்டும் தொடங்கவில்லை; ஓய்வு ஒழிச்சலற்று பல மணிநேரம் அந்தத் தொழிற்கருவிகளுக்கு இணையாய் சுழன்று உழைத்த உழைப்பாளர்களோடும்தான் தொடங்கியது.

    தற்போதைய இந்தியச் சமூகச்சூழலில் நிலவுகிற தவறானப்பொருளாதாரக் கொள்கைகளினாலும், பாஜக அரசதிகாரத்தின் கோரமுகத்தாலும், எதேச்ச திகாரப்போக்காலும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தனிப்பெரு முதலாளிகள் இலாபவெறி வேட்டையாடுகிற நிலை தான் நீடிக்கிறது. இந்நிலையிலிருந்து மீள்வதற்கும், இன அழிப்பு உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுக்கவும் இந்நாளில் உறுதியேற்க வேண்டியது நமது ஒவ்வொருவரின் பொறுப்பும், கடமையுமாகும். உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் என நம்மை நோக்கி வரும் அனைத்து அச்சுறுத்தல்களுக்குமெதிராக களம் காண உழைப்பாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம். போராடிப்பெற்ற உரிமைகளை இழந்துவிடாமல் பாதுகாப்போம்.

    மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

    தங்கள் உதிரத்தால் உலகை இயங்கச் செய்யும் உழைக்கும் மக்களின் மேம்பாட்டுக்குப் பாடுபட உறுதியேற்று, உழைப்பாளிகளுக்கு எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக வளசரவாக்க கட்சித் தலைமை அலுவலகத்தில், தொழிற்சங்கப் பேரவை மாநிலத் தலைவர் இரா.அன்புத்தென்னரசன் ஆகியோரது தலைமையில் மே தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், அரசு போக்குவரத்துக் கழக சென்னை கோட்டச் செயலாளர் மு.குமரன் தொழிற்சங்கப் பேரவைக் கொடியேற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் இராஜேந்திரன் அவர்கள் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுக் கல்வெட்டைத் திறந்துவைத்தார். உடன் தொழிற்சங்கப் பேரவை துணைத்தலைவர் கோ.சீனிவாசன், திருப்பெரும்புதூர் நாடாளுமன்றப் பொறுப்பாளர் ஈரா.மகேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் மு.ஆனந்த், உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னண்ணன், மதுரவாயல் தொகுதிச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட தொழிற்சங்கப்பேரவை பொறுப்பாளர்களும், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×