search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி
    X
    கருணாநிதி

    கருணாநிதியின் முழு உருவ 16 அடி உயர வெண்கல சிலை: ஜூன் 3ந்தேதி திறக்கப்படுகிறது

    கருணாநிதிக்கு இதுவரை நிறுவப்பட்ட சிலைகளிலேயே உயரமான சிலையாக இந்த சிலை அமைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை சார்பில் சிலை அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
    பொன்னேரி:

    கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ந்தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.

    சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

    இதையொட்டி கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் கருணாநிதி சிலையை தீனதயாளன் சிற்பி வடிவமைத்து வருகிறார்.

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலை போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்படுகிறது. இந்த சிலை 16 அடி உயரம் கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது. கருணாநிதிக்கு இதுவரை நிறுவப்பட்ட சிலைகளிலேயே உயரமான சிலையாக இந்த சிலை அமைக்கப்படுகிறது.

    பொதுப்பணித்துறை சார்பில் சிலை அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சிலையை வைப்பதற்காக 12 அடி உயர பீடம் அமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.1.56 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ந்தேதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    சிலை வடிவமைப்பு பணிகள் தொடர்பாக சிற்பி தீனதயாளன் கூறியதாவது:-

    எங்களது தாத்தா எஸ்.பி. பிள்ளை காலத்தில் இருந்து காந்தி, காமராஜர், சி.பா.ஆதித்தனார், அண்ணா, கண்ணகி, முரசொலி மாறன், கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் சிலைகளை செய்து வருகின்றோம். தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் வைப்பதற்காக கருணாநிதியின் வெண்கல முழு உருவ சிலை 16 அடியில் வடிவமைத்து வருகிறோம்.

    கடந்த 4 மாதங்களாக 3 நேர பகுதிகளாக 10 பேருடன் சேர்ந்து முழு வீச்சில் வேலை நடந்து வருகிறது. தற்போது வெள்ளை களிமண்ணால் ஆன உருவச்சிலை பிளாஸ்டர் பவுடர் வடிவமைப்பு வேலை முடிந்து மெழுகு சிலை பணிகள் நடந்து வருகின்றன.

    இதன் வடிவம் எடுத்து வெங்கல வார்ப்பு கிரைண்டிங், வெல்டிங், வண்ண பூச்சு உள்ளிட்ட வேலைகள் இருப்பதாகவும் சிலையின் எடை அளவு 2½ டன்னுக்கும் அதிகமாக காணப்படுகிறது.

    வெள்ளைக் களிமண் சிலை உருவமைப்பு சிறந்த புகைப்பட நிபுணர் மூலம் போட்டோ எடுத்து முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் வாங்கிய நிலையில் 3-ம் கட்ட நிலையில் வேலை நடந்து வருகிறது. இன்னும் 4 கட்ட வேலைகள் விரைவில் முடிவடையும். தமிழகத்தில் மிகச்சிறந்த சிலையாக கருணாநிதியின் சிலை காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×