search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாநகரில் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படும் - மேயர் தகவல்

    திருப்பூரில் குப்பை அகற்றம், ஒரு வாரத்துக்கு 500 டன்னாக இருந்தது. இந்த வாரம் 700 டன்னாக உயர்ந்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மொத்தமுள்ள 60 வார்டில் 30ல் மாநகராட்சி ஊழியர்களும், 30ல் தனியார் நிறுவன ஊழியர்களும் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏறத்தாழ 3 ஆயிரம் ஊழியர்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், ஏராளமான எந்திரங்கள் ஈடுபட்டுள்ளன.

    இருப்பினும், நகரின் பல பகுதிகளிலும் குப்பை தேக்கம் அதிகளவில் உள்ளது. இது மாநகராட்சி நிர்வாகத்துக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    முதல் கட்டமாக தூய்மை பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவேடு முறை 3வது மண்டலம் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், துாய்மை பணியாளர் வருகை முறைப்படுத்தப்பட்டு பணிகள் வேகம் பிடித்துள்ளது.

    அடுத்த கட்டமாக குப்பை கொண்டு செல்லும் வாகனங்கள் முறைப்படுத்தும் பணி துவங்கியது. அதன்படி இதுவரை 500 மெட்ரிக் டன் என்ற அளவில் அகற்றப்பட்ட குப்பை கடந்த வாரம் 600 டன்னும், நடப்பு வாரம் 700 டன் என்ற அளவையும் எட்டியுள்ளது.

    இதுதவிர புதிய நடைமுறையாக, 3 வார்டுக்கு ஒரு லோடர் வாகனம், குப்பை ஏற்றும் லாரிகள், அதிகளவிலான துாய்மை பணியாளர்கள், அனைத்துவகை உபகரணம் என ஒதுக்கப்பட்டு, குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடக்கும் பகுதிகளில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை  மேயர் தினேஷ்குமார், கமிஷனர் கிராந்திகுமார் பார்வையிட்டனர்.

    மேயர் கூறுகையில், ''இரண்டொரு நாளில் நகரில் இதுபோல் நீண்ட நாள் தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படும். தொடர்ந்து தூய்மை பணி மேற்கொள்ளப்படும் நிலையில் அன்றாடம் சேகரமாகும் குப்பை எந்த பகுதியிலும் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படும்.

    இது தவிர குப்பை அகற்றும் பணியில் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றும் வகையிலும், தொழிற்சாலைகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுதல் அல்லது மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல் போன்ற திட்டம் மேற்கொண்டு அவற்றை அகற்றுவதற்கான தீர்வு காணப்படும் என்றார்.
    Next Story
    ×