search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடநாடு பங்களா
    X
    கொடநாடு பங்களா

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- அ.தி.மு.க. நிர்வாகி சஜீவனிடம் 2-வது நாளாக விசாரணை

    கொடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்து வந்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அ.தி.மு.க வர்த்தக அணி மாநில தலைவருமான சஜீவனை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது.

    இங்கு கடந்த 2017-ல் காவலாளி கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ்சாமி, மனோஜ் சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கொள்ளை சம்பவம் நடந்த சில நாட்களில், சேலத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.

    மேலும் கேரளாவில் நடந்த விபத்தில் சயான் மனைவி மற்றும் குழந்தையும் இறந்தனர். கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டாக பணிபுரிந்த தினேசும் தற்கொலை செய்து கொண்டார்.

    சினிமா படத்தை மிஞ்சும் அளவுக்கு நடந்த இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கடந்தும் இதுவரை இந்த வழக்கில் மர்மமே நீடிக்கிறது.

    கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொடநாடு வழக்கில் மறு விசாரணை நடந்து வருகிறது. தனிப்படையினர் சயான், கொடநாடு எஸ்டேட் மேலாளர், குற்றவாளிகள் தப்பி சென்ற காரின் உரிமையாளர் என 200க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடத்தியுள்னர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, அவரது மகன், தம்பி மகன், முன்னாள் உதவியாளர், அ.தி.மு.க. பிரமுகர் அனுபவ் ரவியும் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனர்.

    கடந்த வாரம் கொடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து 2 நாட்கள் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டதாகவும், அவர் பல தகவல்களை தெரிவித்தாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கொடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்து வந்த பர்னிச்சர் கடை உரிமையாளரும், அ.தி.மு.க வர்த்தக அணி மாநில தலைவருமான சஜீவனை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    நேற்று அவரிடம் தனிப்படை போலீசார் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நீடித்தது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் 2-வது நாளாக அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கொடநாடு கொள்ளை சம்பவம் நடந்த போது சஜீவன் துபாயில் இருந்தாக கூறப்பட்டது. அவர் துபாய் சென்றதற்கான காரணம் என்ன? கொடநாடு கொள்ளை சம்பவத்தில் அவருக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்தனர்.

    இவர் கனகராஜின் நெருங்கிய நண்பர் எனவும் கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் குறித்தும், கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கு பிறகு அவர் உங்களை ஏதாவது தொடர்பு கொண்டு பேசினாரா? என்பது குறித்தும் போலீசார் அவரிடம் கேள்விகள் கேட்டதாக தெரிகிறது.

    இதுதவிர கொடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் 2 பிரிவாக பிரிந்து ஒரு கும்பல் கேரளாவை நோக்கியும், மற்றொரு கும்பல் கோவையை நோக்கியும் சென்றன. அப்போது கேரளாவுக்கு சென்ற கும்பல் கூடலூர் சோதனை சாவடியில் போலீசாரிடம் சிக்கியதாகவும், இந்த கும்பலை இவர் தப்பிக்க வைத்தாகவும், அந்த சமயத்தில் பலராலும் பேசப்பட்டு வந்தது. அது தொடர்பாகவும் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

    Next Story
    ×