search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீது மோசடி வழக்கு- கணவர் கைது

    வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டி டாக்டர்ஸ் காலனியை சேர்ந்தவர் திருவேங்கடம், கட்டிட காண்டிராக்டர். இவரது மகன் பிரசன்னாவுக்கும், நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதையடுத்து பவித்ரா நெல்லைக்கு சென்று விட்டார். ஈரோடு 4 ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன், மின் வாரிய காண்டிராக்டர். இவரது மனைவி லீலா. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர்கள் பவித்ராவிடம பேசி சமாதானம் செய்வதாக திருவேங்கடத்திடம் கூறி உள்ளனர். பின்னர் சமாதானம் பேசி விட்டதாகவும், ரூ. 25 லட்சம் கொடுத்தால் விவாகரத்து தந்து விடுவதாக மருமகள் பவித்ரா தெரிவித்ததாகவும், திருவேங்கடத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து திருவேங்கடம் ரூ.25 லட்சத்தை மணிவண்ணனிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட அவர் பணத்தை பவித்ராவிடம் கொடுத்துவிட்டேன், இனி உங்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூறி உள்ளார்.

    இதற்கிடையே பவித்ரா, கணவர் பிரசன்னா மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக நெல்லை மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பிறகு தான் தங்களிடம் வாங்கிய ரூ.25 லட்சத்தை மருமகளிடம் கொடுக்காமல் மணிவண்ணன் தம்பதி ஏமாற்றியது தெரிய வந்தது. இது குறித்து திருவேங்கடம் சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

    இதையடுத்து மாஜி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லீலா, அவரது கணவர் மணிவண்ணன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே முன் ஜாமீன் கேட்டு கணவன்-மனைவி 2 பேரும் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மணிவண்ணனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான லீலாவை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×