
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் பகுதி, பேரூராட்சி பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான 3-ம் கட்ட தேர்தல் இன்று நடந்தது. மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனுக்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் பெற்றனர்.
மதுரையில் எப்போதும் சித்திரை திருவிழா விமரிசையாக நடக்கும். கடந்த ஆண்டுகளில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெற்றது இல்லை. ஆனால் நேற்று கள்ளழகர் வைபோகத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி வைகை ஆற்றில் 2பேர் உயிரிழந்தது மிகப்பெரிய மோசமான சம்பவம் ஆகும்.
இந்த துயர சம்பவத்திற்கு மதுரை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பொதுப்பணித்துறை தான் காரணம். அவர்கள் முழுப்பொறுப்பேற்க வேண்டும். பொதுமக்கள் அழகரை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை.
அரசு அதிகாரிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு பாதையை ஒதுக்கிவிட்டு மக்கள் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரவில்லை. அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம். வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தை குறைத்திருக்கலாம்.
ஆற்றில் அதிக தண்ணீர் வந்தால் பொதுப்பணித்துறை பனையூர் கால்வாய்க்கு நீர் செல்லும் ஷட்டரை திறந்து தண்ணீரை வெளியேற்றி இருக்கலாம். அதை செய்யவில்லை. உயர் அலுவலர்கள், குடும்பத்தினர் சாமி பார்க்க வசதி ஏற்படுத்திவிட்டு, பொதுமக்கள் வருகிற பாதையை அடைத்து விட்டனர்.
அனைத்து துறைகளும் இந்த சம்பவத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த தொகை பத்தாது. எனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா தொடர்பான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த செல்லூர் ராஜூ, அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை என முடிவாகி விட்டது என்று மட்டும் கூறினார்.