
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 4 தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று கனமழையுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் குளுகுளு கால நிலை நிலவுகிறது.
இதனிடையே தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கி உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை.
தற்போது கொரோனா நீங்கியதால் குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் ஏற்காட்டை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
ஏற்காட்டில் படகு இல்லம் ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, சேர்வராயன் கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு காணப்பட்டனர்.
அவர்கள் இயற்கை அழகினை ரசித்தபடி செல்பி எடுத்து பொழுதை கழித்தனர். இன்று காலையில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்றவண்ணம் இருந்தன. சாலை ஓர கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.
பொதுவாக ஏற்காடு வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் படகு சவாரிக்காக மிதி படகு மற்றும் துடுப்பு படகுகள் உள்ளன. இந்த படகுகள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வண்ணம் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. படகில் சென்றவாறு ஏற்காட்டின் அழகினை சுற்றுலா பயணிகள் ரசிக்கிறார்கள். மேலும் படகில் இருந்தவாறே செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.
ஏற்காட்டில் உள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிரம்பின. 2 ஆண்டுக்கு பின்னர் ஏற்காடு களை கட்டியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.