
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி கரையில் உள்ள கருங்குளம் மலைமேல் உள்ள வெங்கடாசலபதி கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 10 நாட்கள் உற்சவ விழா வருடம் தோறும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த கோவில் வகுளகிரி ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தாண்டிற்கான சித்ரா பவுர்ணமி விழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் தோளுக்கினியான், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருடவாகனம், குதிரை வாகனம், சேஷ வாகனம், பொன் சப்பரம், யானை வாகனத்தில் வரும் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான இரவு பொன்னிற சப்பரத்தில் மலையில் இருந்து கீழே இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக காலையில் நடை திறக்கப்பட்டு வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு நவகலச திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சீனிவாசர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு பொன்னிற சப்பரத்தில் காட்சி அளித்தார். தொடர்ந்து வகுளகிரி மலையில் உள்ள கோவிலை சப்பரம் வலம் வந்தது.
அதனை தொடர்ந்து வகுளகிரி மலையில் இருந்து கீழே சப்பரம் இறங்கியது. பின்னர் வீதிகளில் உலா வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோபாலா கோஷத்துடன் சீனிவாசரை வணங்கினர்.