
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாள் அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
சித்ரா பவுர்ணமி அன்று கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும்போது சந்திரன் உதயமாகும். இவ்விரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியிலும் மட்டும் தான் காண முடியும்.
கன்னியாகுமரியில் நிகழும் இந்த அபூர்வ காட்சியை காண சித்ரா பவுர்ணமி அன்று நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் கூடுவார்கள். நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர்.
மாலை 6.20 மணிக்கு சூரியன் மறையும் நேரத்தில் மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் சூரியன் மறையும் காட்சி மேக மூட்டத்தினால் தெளிவாக தெரியவில்லை.
இதனால் சூரியன் மறையும் காட்சியை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதே வேளையில் கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் எழுந்தது.
அப்போது கிழக்கு கடல் பகுதியில் உள்ள வானம் சந்திரனின் ஒளி வெளிச்சத்தால் “பளிச்” என்று மின்னியது. கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையில் தோன்றிய சந்திரன் உதயமான இந்த அரிய காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலி துறை கடற்கரைப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
பலர் இந்த அபூர்வக்காட்சியை தங்களது செல்போன்கள் மற்றும் கேமராக்கள் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலர் செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர். சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.