
அவிநாசி:
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். இங்கு சித்திரை தேரோட்ட விழா அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராயம்பாளையம் பகுதி மக்கள், கோவில் தேரோட்டத்தை மாலையில் நடத்த வேண்டும். 2 நாட்கள் தேரோட்டம் நடத்தப்படுவதன் மூலம் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும்.
தேர் இழுப்பவர்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.கோவில் அன்னதான கமிட்டி உள்ளிட்ட தரப்பினர், வழக்கம் போல் பகல் நேரத்தில் ஒரே நாளில் தேரோட்டம் நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அப்போது ராயம்பாளையம், புதுப்பாளையம் பொது மக்கள் பலர் கூட்டத்தில் அமர மறுத்ததுடன் தேர்த் திருவிழாவை மாலையில் 2 நாட்கள் நடத்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம் என்று வாதிட்டனர். அவர்களை செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி சமாதானப்படுத்த முயன்றாலும், இருக்கையில் அமர மறுத்து அவரை முற்றுகையிட்டனர். மற்றொரு தரப்பினரோ 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் தேரோட்டத்தை வழக்கம் போல் பகல் நேரத்தில் நடத்த வேண்டும்.
ஒரே நாளில் நடத்தி முடிக்க வேண்டும். நிர்வாக ரீதியாக உறுதியான முடி வெடுக்காமல் இப்பிரச்சினையை கிளப்பியதே செயல் அலுவலர் தான் எனக்கூறி, அவரை முற்றுகையிட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பிலும், தேரோட்ட நேரம் தொடர்பாக கருத்து கேட்டு துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பது எனவும், அரசின் வழிகாட்டுதல்படி, தேரோட்டத்தை நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், அவிநாசி இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.