
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக வருகை புரிந்துள்ளனர்.
மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய மோயர்சதுக்கம், தூண்பாறை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்து ஏரிச்சாலைப்பகுதியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
அவ்வப்போது பெய்கின்ற சாரல் மழையால் குளு குளு சீதோஷ்ணம் நிலவி வருகிறது. மழையில் நனைந்தபடியே உற்சாகமாக சுற்றுலா இடங்களை கண்டு மகிழ்ந்தனர். மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து கூட்டம் அதிகரிப்பதால் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இயற்கை எழில் நிறைந்த சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க முடியாமல் சில சுற்றுலா பயணிகள் அறைக்கு திரும்பினர். இப்பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சீசன் காலங்களில் குறிப்பாக கோடை சீசனின் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில் முன்னேற்பாடாக சுற்றுலாத்தலங்களில் வாகன நிறுத்தங்களை உருவாக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தரவும் சுற்றுலாப்பயணிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.