search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த மஞ்சப்பையை மாணவி ஒருவர் சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.
    X
    விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த மஞ்சப்பையை மாணவி ஒருவர் சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கினார்.

    மஞ்சப்பையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்த மாணவ-மாணவிகள்

    மஞ்சப்பை இயக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லையில் இன்று விழிபுணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நெகிழி இல்லா நெல்லை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக அரசு அறிவித்துள்ள மஞ்சப்பை இயக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லையில் இன்று விழிபுணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நெல்லை டவுன் குறுக்குத்துறை கோவில் படித்துறையில் தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் மஞ்சப்பை திட்ட விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டது. இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தமிழ் நாகரீகம் குறித்து மஞ்சப்பையில் ஓவியங்கள் வரைந்தனர்.

    அதில் தாமிரபரணி நீர்நிலை, புராதான சின்னங்கள், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் வரைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் அவர்கள் வரைந்த ஓவியங்களை பார்வையிட்டார்.

    தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சபாநாயகர் அப்பாவு மஞ்சப்பைகளை வழங்கினார். இதில் ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ், மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×